பதிவு செய்த நாள்
22
ஆக
2013
10:08
சென்னை: இந்து சமய அறநிலையத் துறை கோவில்களில், உயரதிகாரிகளின் உத்தரவை அடுத்து, சிறப்பு நுழைவு கட்டணத்தை, தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என, கோவில் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையேற்று, தமிழகம் முழுவதும், 142 கோவில்களில், சிறப்பு தரிசனம் நுழைவுக் கட்டணம், தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 38,689 கோவில்கள் உள்ளன. இவற்றில், 235 கோவில்கள், அதிகளவில் வருவாய் ஈட்டும் கோவில்களாக உள்ளன. இக்கோவில்களில், சுவாமியை தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம், சிறப்பு நுழைவுக் கட்டணம் கோவிலுக்கு ஏற்றவாறு, 5 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையில் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம், ஆண்டிற்கு ஒரு கோவிலுக்கு, பல லட்சம் வரை வசூலாகி வந்தது. இதில் கிடைக்கும் வருவாய், கோவில் வளர்ச்சி பணிக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் திடீரென, இந்து சமய அறநிலையத் துறை உயரதிகாரிகளின் உத்தரவை அடுத்து, தமிழகம் முழுவதும், 142 கோவில்களில், சிறப்பு தரிசனம் நுழைவுக் கட்டணத்தை, கோவில் செயல் அலுவலர்கள் மூலமாக தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர். இதுகுறித்து, செயல் அலுவலர் ஒருவர் கூறுகையில், ""சிறப்புக் கட்டணம் ரத்து செய்யக் கோரி, ஒருவர் மதுரை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதன் எதிரொலியாக, உயரதிகாரிகளின் வாய் வழி உத்தரவை அடுத்து, கோவில்களின் சிறப்பு நுழைவுக் கட்டணம், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.