பதிவு செய்த நாள்
21
ஆக
2013
04:08
விரதங்கள் என்பவை மனதையும், உடலையும் தூய்மைப்படுத்துபவை. இல்லறத்தில் இருப்பவர்களுக்காக சதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி, திருவோணம், வெள்ளிக்கிழமை விரதங்கள்உள்ளன. இதுபோல், துறவிகளுக்கான விரதமாக சாதுர்மாஸ்ய விரதம் விளங்குகிறது.சதுர் என்றால் நான்கு. இதுவே சாதுர் ஆனது. இந்த விரதத்தை நான்கு மாதம் அனுஷ்டிப்பார்கள். சரி...நமக்காக நாம் இருக்கும் விரதத்தால் ஏதோ ஒரு பலன் கிடைக்குமென நம்புகிறோம். துறவிகளோ முற்றும் துறந்தவர்கள்...அவர்கள் என்ன பலன் கருதி விரதம் இருக்கிறார்கள் என்ற கேள்வி மனதில் எழும். துறவிகள் தங்களுக்காக இந்த விரதத்தை அனுஷ்டிப்பதில்லை. மனித சமுதாயம் மட்டுமல்ல...பிற உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற பொதுநல நோக்கத்துடனேயே இந்த விரதத்தை அனுஷ்டிக்கிறார்கள். பொதுவாக இந்த விரதம் ஆடி பவுர்ணமியில் துவங்கி, ஐப்பசியில் முடிப்பார்கள். பெரும்பாலான இடங்களில், பக்ஷõ வை மாஸா என்ற வேதவாக்கியத்தை அனுசரித்து, நான்கு மாதங்களை நான்கு பட்சங்களாக குறைத்து, இரண்டு மாதங்கள் மட்டும் மேற்கொள்கிறார்கள். காஞ்சி மடத்தில், இந்த முறைப்படியே அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தக் காலங்களில் மழை அதிகமாகப் பெய்யும். பூச்சிகள் அதிகமாக வெளியே நடமாடும். அந்த பூச்சிகள் தங்கள் காலில் மிதிபட்டு விடக்கூடாதே என்ற உயர்ந்த எண்ணம் ஒரு காரணம். இதன்மூலம், துறவிகள் மக்களுக்கு ஜீவகாருண்யத்தைப் போதித்தார்கள். கடவுளின் படைப்பில் மனிதன் மட்டுமல்ல, எல்லா உயிரினங்களுமே சுதந்திரமாக வாழ வேண்டும் என அவர்கள் நினைத்தார்கள். தங்களைப் பார்த்து எல்லா மக்களும் இந்த புண்ணியச்செயலைக் கடைபிடிக்க வேண்டும் என்று மறைமுகமாக அறிவுறுத்துகிறார்கள்.அது மட்டுமல்ல! இந்தக் கா லத்தில் உணவுக்கட்டுப்பாட்டையும் அவர்கள் அனுசரிக்க சொன்னார்கள். குறிப்பிட்ட இந்தக்காலத்தில் மழை காரணமாக, சூரியனை பல நாட்கள் பார்க்காமல் போய்விடும் சூழ்நிலை உண்டு. சூரியனைப் பார்க்காத ஒவ்வொரு நாளும் வீணே! என்று அவர்கள் போதித்தார்கள். குளிரோ, மழையோ, வெயிலோ...இதையெல்லாம் காரணம் காட்டி, காலையில் எழாதவர்கள் பலர் உண்டு. குளிரடிக்கிறது என இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்குவார்கள். துறவிகள் இவ்வாறு செய்வதில்லை. எல்லா சீதோஷ்ணமும் அவர்களுக்கு ஒன்று தான். அவர்கள் வழக்கம் போல், பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை 4.30 முதல்) தங்கள் அன்றாடப் பணியைத் துவங்கி விடுவார்கள்.அது மட்டுமல்ல! சூரியன் அன்று உதித்தால் தான் சாப்பிடவே செய்வார்கள். ஒருவேளை, நாள் முழுக்க மழை பெய்து சூரியன் கண்ணில் படவில்லை என்றால், சாப்பிடவே மாட்டார்கள்.துறவிகளின் இந்தச் செயலைப் பார்த்து, மகாத்மா காந்தியின் அன்னை கஸ்தூரிபாய் அம்மையார், சூரியனை தரிசித்தால் மட்டுமே சாப்பிடும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார். தாய் பட்டினி கிடப்பதை பொறுக்க முடியாத காந்திஜி, வீட்டு வாசலில் வந்து நின்று, சூரியன் வானில் தெரிந்ததும், அம்மாவை அழைப்பார். சூரியன் தன் கண்ணில் பட்டால் தான், அவர் சாப்பிடுவார்.துறவிகள் சாதுர்மாஸ்ய விரதம் இருக்கும் காலத்தில், மக்கள் அவர்களைச் சந்தித்து ஆசி பெற வேண்டும். இடிந்த கோயில்களைப் புதுப்பிக்கவும், மடங்களுக்கும், வேதம் கற்கும் மாணவர்களுக்கும் நிதியுதவி செய்ய வேண்டும். இவ்வாறு செய்பவர்கள் திருவருளுடன் குருவருளும், சகல வளமும் பெற்று பல்லாண்டு வாழ்வார்கள்.