பதிவு செய்த நாள்
21
ஆக
2013
04:08
ஸ்ரீநிவாசன் வீற்றிருக்கும் வெங்கடாசலத்தின் மகிமையை புராணங்கள் விரிவாகப் பேசுகின்றன. சப்தகிரி என்னும் ஏழுமலை மீது பெருமாள் வீற்றிருக்கிறார். கோவர்த்தனகிரியை கிருஷ்ணர் ஏழுநாள் தாங்கி ஆயர்களையும், பசுக்களையும் காத்தார். தன்னை ஏழுநாள் சுமந்த பெருமாளை ஏழுமலையாகத் தாங்கி நிற்கிறது கோவர்த்தனகிரி. வேங்கடம் என்பதற்கு பாவத்தை ஒழிப்பது என்பது பொருள். ராமானுஜர் கால்வைக்க அஞ்சி முழங்காலால் மலையேறியதாக குருபரம்பரை வைபவம் கூறுகிறது. பரமபவித்ரமான இந்த மலையில், பரம்பொருளே ஒரு விவசாயியாக, பூலோகத்தில் தான் விளைவித்த பக்தி என்னும் பயிருக்கு சேதம் ஆகாமல் காவல் காத்துக் கொண்டு நிற்கிறார். அவர் ஏறி நிற்கும் பரண் போல பூலோகத்தில் இந்த மலை இருக்கிறது. கற்கண்டு கட்டிபோல காணக் காண தெவிட்டாத அழகு வண்ணத்துடன் வேங்கடத்தில் சேவை சாதிக்கிறார். இங்கு ஸ்ரீநிவாசர் எழுந்தருளிய வரலாறு விசேஷமானது. நைமிசாரண்யத்தில் கஷ்யப மகரிஷியின் தலைமையில் சப்தரிஷிகள் யாகம் நடத்தினர். அதைக் காண வந்த நாரதர், யாக பலனான அவிர்பாகத்தை யாருக்கு அளிப்பீர்கள்? என்று கேட்டார். மும்மூர்த்திகளில் யார் சத்வகுண (சாந்தம்) மிக்க சிரேஷ்டரோ அவருக்கு வழங்குவோம், என பதிலளித்தனர். அவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பிருகு மகரிஷிக்கு வழங்கப்பட்டது. பிரம்மாவின் சத்தியலோகத் திற்கு அவர் புறப்பட்டார். அங்கு பிரம்மா சரஸ்வதியிடம் சல்லாபித்தபடி இருந்ததால், பிருகுவை கண்டு கொள்ளவில்லை. கோபம் கொண்ட பிருகு, பிரம்மாவுக்கு இனி பூலோகத்தில் கோயில் இருக்காது என சாபமிட்டார். அப்படியே, சிவனின் கைலாயம் சென்றார். அதே நிலை தான்! அங்கும்.சிவபார்வதி ஏகாந்தத்தில் இருந்தனர். பிருகுவை சிவன் கண்டு கொள்ளவில்லை. நாணம் கொண்ட பார்வதி வெட்கத்தில் நகர்ந்தாள். கோபம் கொப்பளிக்க பிருகு சிவனிடம், பூலோகத்தில் உமக்கு உருவவழிபாடு இனி இருக்காது. ஆவுடையாக பூஜை நடக்கட்டும், என சபித்தார்.கண்களில் கனல் பறக்க பிருகு வைகுண்டம் புறப்பட்டார். அங்கு பெருமாள் யோகநித்திரையில் ஆழ்ந்திருந்தார். ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் அவர் பாதங்களை வருடிக் கொண்டிருந்தனர். பெருமாள் ராமனாக அவதரித்தபோது, அவர் நாளும் துயிலும் அழகைக் கண்டு ரசித்தவள் கவுசல்யா. அதனால் தான், வெங்கடேச சுப்ரபாதம் கவுசல்யா சுப்ரஜா ராமபூர்வா... என்று கவுசல்யாவுக்கு ஏற்றம் தருகிறது. வைகுண்டத்து பெருமாளும்,தன்னைக் கண்டு கொள்ளவில்லை என்று எண்ணிய பிருகு, அவரின் மார்பில் எட்டி உதைத்தார். ஆனால், பெருமாளோ, உதைத்த பாதம் வலிக்குமே என்று சொல்லி கைகளால் தாங்கினார். பிருகுவின் கோபம் மறைந்தது. மும்மூர்த்தியில் விஷ்ணுவே சாத்வீக சிரேஷ்டர் என்பதை உணர்ந்தார். பிருகுவின் செயலைப் பொறுக்க இயலாத லட்சுமி, வைகுண்டத்தை விட்டு பூலோகத்தில் கோதாவரிக் கரையிலுள்ள கொல்லாப்பூர் வந்து பர்ணாசலை அமைத்து தவம் செய்யத் தொடங்கினாள். லட்சுமியைத் தேடிவந்த பெருமாளும் ஸ்ரீநிவாசனாக பூலோகம் வந்தார். தேடிக் களைத்து ஒரு புளியமரத்தடியில் அமர்ந்தார். ஸ்ரீநிவாசனைக் கண்ட நாரதர், உதவிக்காக பிரம்மா, சிவனை அங்கு அனுப்பி வைத்தார். அவர்கள் இருவரும் லட்சுமியிடம் சென்று ஸ்ரீநிவாசனின் நிலையை எடுத்துரைத்தனர். ஸ்ரீநிவாசனுக்கு உணவளிக்க விரும்பிய அவர்கள், ஆளுக்கொரு வேஷமிட்டனர். பிரம்மா பசுவாகவும், சிவன் கன்றாகவும், லட்சுமி பசுமேய்க்கும் இடைச்சியாகவும் புறப்பட்டனர். பார்ப்பதற்கு நல்ல ஜாதிப்பசுவாக இருந்ததால், இடைச்சியிடம் சோழராஜனின் மனைவி பசுவை விலைக்கு வாங்கிக் கொண்டாள். மறுநாள் பசுக்கூட்டம் இடையனுடன் மேய்ச்சலுக்கு புறப்பட்டன. அப்போது, புதிய பசுவான பிரம்மா, ஸ்ரீநிவாசன் பசிதீர்க்க, புற்றில் பாலைச் சொரிந்து நின்றார். இதைக் கண்ட இடையன் கோடரியால் பசுவை அடிக்க முயன்றான். அதைத் தடுக்க முயன்ற ஸ்ரீநிவாசனின் நெற்றியில், கோடரி பட்டு, 100 பனைமர உயரத்திற்கு ரத்தம் கொப்பளித்தது. இதைக் கண்ட இடையன் மயங்கி விழுந்தான். விஷயமறிந்து அங்கு வந்த சோழராஜனிடம் ஸ்ரீநிவாசன்,மக்கள் செய்த தவறு மன்னனையே சேரும், என்று சொல்லி, அவனைப் பேயாகும்படி சபித்தார்.இதற்கிடையில், முன்ஜென்மத்தில் கண்ணனை வளர்த்த யசோதை, வகுளமாலிகை என்னும் பெயரில், வேங்கடத்தில் வராஹரின் ஆஸ்ரமத்தில் பணிவிடை செய்து வந்தாள். தலைக் காயத்திற்கு மருந்திட மூலிகையைத் தேடிய ஸ்ரீநிவாசன், வகுளமாலிகை யைக் கண்டான். அன்பினால் அம்மா என அழைத்ததும் அவளுக்கு முன்ஜென்ம நினைவு வந்தது. வராஹரின் ஆஸ்ரமத்திற்கு அழைத்துச் சென்று, ஸ்ரீநிவாசனின் காயத்திற்கு மருந்திட்டாள். வராஹரிடம், ஸ்ரீநிவாசன் நடந்த விஷயமனைத்தையும் விவரித்தார். அவரும், ஸ்ரீநிவாசா! இன்று முதல் இங்கேயே தங்கிக் கொள்! என்றார். ஸ்ரீநிவாசன் நிலை இப்படியிருக்க, மற்றொருபுறம் பத்மாவதியின் வரலாறைக் காண்போம். சோழநாட்டை ஆண்ட மன்னன் ஆகாசராஜன்- தரணிதேவி தம்பதிக்கு குழந்தை இல்லை. குலகுரு சுகமுனிவர் மூலம் புத்திரகாமேஷ்டியாகம் செய்தனர். யாகத்திற்காக உழுதபோது, ஏர்முனையில், பேழை ஒன்றில் ஆயிரம் இதழ் கொண்ட தாமரையில் பெண்குழந்தை கிடைத்தது. தாமரைக்கு பத்மம் என்று பெயர். அதனால், குழந்தைக்கு பத்மாவதி என பெயரிட்டனர். பத்மாவதி கன்னிப் பருவம் அடைந்தபோது, திரிகால ஞானியான நாரதர், பத்மாவதிக்கு நாராயணனே கணவனாக வாய்ப்பான், என எடுத்துரைத்தார். ஒருநாள், காட்டுயானை ஒன்று பிளிறிக் கொண்டு வகுளாதேவியின் ஆஸ்ரமம் முன் வந்தது. ஸ்ரீநிவாசன் அம்பு,வில் எடுத்து யானையை விரட்டச் சென்ற போது, வழியில் ஒரு நந்தவனத்தில் தோழியருடன் பத்மாவதியைக் கண்டார். அவள் அழகில் மனதைப் பறி கொடுத்தார். அன்பினால் இருவர் உள்ளமும் இணைந்தன. மறுநாள், ஸ்ரீநிவாசன் குறத்தி வேடத்தில் பத்மாவதியிடம் சென்று , விரைவில் காதலன் கரம் பிடிப்பாய், என்று குறி கூறினார். வகுளாதேவியும் ஆகாசராஜனிடம் ஸ்ரீநிவாசனுக்காக பெண் கேட்டு புறப்பட்டாள். பெற்றோர் சம்மதத்துடன் தேவகுருவான பிருகஸ்பதியை அழைத்து முகூர்த்த பத்திரிகை எழுதப்பட்டது. வைகாசி வளர்பிறை தசமியை முகூர்த்தநாளாக குறித்தனர். திருமணச் செலவுக்காக குபேரனிடம் ஸ்ரீநிவாசன் பணம் பெற்றுக் கொண்டு கடன்பத்திரம் எழுதிக் கொடுத்தார். மணவிழாவைக் காண்பதற்காக தேவதைகள் எல்லாரும் ஒன்றுகூடினர். தேவர்கள் புடை சூழ மாப்பிள்ளை ஸ்ரீநிவாசன், யானைமீது நாராயணபுரத்திற்கு பவனி வந்தார். வசிஷ்டரும், பிருகஸ்பதியும் மந்திரம் ஓத, பத்மாவதி மணமேடை வந்தாள். சுபவேளையில் பத்மாவதி கழுத்தில் ஸ்ரீநிவாசன் மங்கலநாணைச் சூட்டினார். இந்த அற்புதக் காட்சியைக் கண்ட வகுளமாலிகை, கண்பெற்ற பயனே ஸ்ரீநிவாசகல்யாணம் காண்பது தான் என பேரானந்தம் கொண்டாள்.