பதிவு செய்த நாள்
21
ஆக
2013
04:08
*மனிதர்களை நேசி. அவர்களுக்குத் தொண்டு செய். அவர்களின் பாராட்டுக்காக ஆசைப்படாதே.
*சித்திரவதை செய்யப்படும் வேளையிலும் கூட, ஒருவன், தனக்கு துன்பம் இழைப்பவனிடமும் கடவுளைக் கண்டான் என்றால் அதுவே பரமஞானம்.
*விவேகமுள்ள சிறந்த நண்பன் கடவுள் மட்டுமே. எப்போது அடிக்க வேண்டும், எப்போது அணைக்க வேண்டும் என்பதை அவரே நன்கு அறிவார்.
*உன்னைத் தூய்மையாக்கும் பொறுப்பை கடவுளிடம் ஒப்படைத்து விடு. உன்னிடம் இருக்கும் தீமையை அகற்றுவது அவர் பணியாகட்டும்.
*நல்ல லட்சியத்தை உருவாக்கிக் கொண்டு, கடமையில் ஆர்வத்தோடு ஈடுபடு. அதற்காகத் தான் மனிதனாக இங்கு வந்திருக்கிறாய். இதை உணர்ந்தால் மகிழ்ச்சியாக வாழலாம்.
*கடவுளின் கண்ணுக்கு அற்பமான பொருள் என்று எதுவும் கிடையாது. அதுபோல, உன் கண்ணிலும் அற்பமானது என்று எதுவும் இருக்கக் கூடாது.
*ஒவ்வொரு எண்ணமும், சொல்லும், செயலும் உன்னுள் இருக்கும் கடவுளுக்கு நீ அளிக்கும் காணிக்கையாக இருக்கட்டும்.
*சோர்வு உன்னைச் சோர்வடைய விட்டுவிடக் கூடாது. அதிலிருந்து விலகிநின்று, அதன் மூலகாரணத்தைக் கண்டறிந்து அழிக்க முயற்சி செய்.
*உத்தமமான பெரிய செயல்களைச் செய்ய நினைத்தால், உடனடியாகச் செய்து விடுவதே நல்லது.
*உன்னால் முடிந்தால் வரை மற்றவர்களைக் கைதூக்கிவிடு. அவர்களின் ஆற்றலை இழந்து போகும் படி செய்து விடாதே.
*ஒருவன் பாவி என்பதற்காக, அவனை வெறுப்பது கூட பாவம் தான். இதன் மூலம் கடவுளின் வெறுப்புக்கே ஆளாகிவிட நேரும்.
*உன்னை நீயே இரக்கமின்றி ஆராய்ச்சி செய். அப்போது தான் நீ, பிறர் மீது இரக்கமும், பரிவும் காட்டத் தொடங்குவாய்.
*கண்களைத் திறந்து பார். உலகம் எப்படிப்பட்டது, கடவுள் எத்தகையவர் என்ற உண்மையைக் கண்டுமகிழ்வாய். பயனற்ற இன்பக் கற்பனைகளை விட்டுவிடு.
*உன் நம்பிக்கைகளை அறிவு என்றும், பிறருடைய நம்பிக்கைகளை பிழை என்றும் எண்ணாதே.
*உயிர்கள் மீது இரக்கம் காட்டு. ஆனால், அவற்றுக்கு அடிமை ஆகிவிடாதே. கடவுள் ஒருவருக்கு மட்டுமே அடிமையாக இரு. அவர் எங்கிருக்கிறார் என உன் அகக்கண்களால் உணர முயற்சி செய்.
*வறுமையை ஒழித்து விட்டால், மனிதவாழ்வு மகிழ்ச்சியும், மனநிறைவும் பெற்றதாகி விடும் என கனவு காணாதே.
*மனச்சுத்தம் உள்ளவன், எதைக் கண்டும் பயம் கொள்ளத் தேவையில்லை.
*கடவுளை நேசிக்கப் பழகு. இல்லாவிட்டால் அவரை உன்னிடம் போரிடவாவது செய்ய வை.
*செல்வத்தை பறை சாற்றிப் பெருமை கொள்ளாதே. தன்னடக்கத்தையும் பிறர் புகழவேண்டும் என்று எதிர்பார்க்காதே.
*அகந்தை, அறியாமையை அறவே ஒழித்தால் மட்டுமே கடவுளை அறிய முடியும். அதற்காக, பயனற்ற வறட்டு வேதாந்த வலைகளில் சிக்கிக் கொள்ளாதே.
-அரவிந்தர்