பதிவு செய்த நாள்
22
ஆக
2013
11:08
திருச்சி: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, திருச்சி, பூம்புகாரில், "கிருஷ்ண ஜெயந்தி தரிசன கண்காட்சி, நேற்றுமுன்தினம் துவங்கியது. கண்காட்சியை, அகில உலக ஸ்ரீ கிருஷ்ண பக்த சபையின் (இஸ்கான்) பொறுப்பாளர் அசோககோவிந்த தாஸ், துவங்கி வைத்தார். தமிழக அரசு நிறுவனமான, பூம்புகார் விற்பனை நிலையத்தில், பண்டிகைக் காலங்களில், கைவினைஞர்களின் படைப்புகள் காட்சிப்படுத்துவது வழக்கம். இதன்மூலம், அருகிவரும் கலைகளுக்கு, புத்துயிர் அளிப்பதோடு, பாரம்பரிய கலை படைப்புகளை, சந்தைப்படுத்தவும் வாய்ப்பாக அமைகிறது. தரிசன கண்காட்சி: இம்மாதம் 28ம் தேதி, கிருஷ்ண ஜெயந்தி என்பதால், "ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி தரிசன கண்காட்சி, நேற்று, பூம்புகாரில் துவங்கியது. இதில், புராண கதைகளில் வரும் கிருஷ்ணரின் பாத்திரங்களின் படி, சிலை மற்றும் படங்கள் அடங்கிய, அரிய தொகுப்பு இடம்பெற்றுள்ளது. திருச்சி, சிங்காரத்தோப்பில் உள்ள பூம்புகாரில், வரும் 31ம் தேதி வரை, (காலை 10 மணி முதல் இரவு 8 மணி) கண்காட்சி நடைபெறும். கதை தழுவிய ஓவியங்கள்: பஞ்சலோகத்தால் ஆன, புல்லாங்குழல் கண்ணன், ராதாகிருஷ்ணன், வெண்ணெய் திருடிய கண்ணன், ஆலிலை கண்ணன், பாமா ருக்மணி கண்ணன், பசுவுடன் கூடிய கண்ணன் என, புராண கதைகளில் வரும் கண்ணனின் பாத்திரங்களை சித்தரித்து, பல்வேறு வடிவங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பித்தளையால் ஆன பசுவுடன் கூடிய கண்ணன், குழந்தை கண்ணன், வெண்ணைத் தாழி கண்ணன் திருவுறுவ சிலைகளும், தஞ்சாவூர் ஓவியங்களும், கோபியர் கண்ணன், கீதா உபதேச கண்ணன் உள்ளிட்ட, கிருஷ்ணரின் வடிவங்கள், ஜமிக்கி வேலைப்பாடுகளுடன் கூடிய ஓவியங்களாகவும், வெல்வெட் பெயிண்டிங், மார்பிள், மரம், காகிதக்கூழ் மற்றும் மண் பொம்மைகளால் ஆன, கண்ணன் திருஉருவ படங்களும், பொதுமக்கள் கவனத்தை ஈர்த்தது. இதுகுறித்து, திருச்சி, பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் கணேசன் கூறுகையில், ""கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள கண்ணன் சிலை மற்றும் படங்கள், 100 ரூபாய் முதல் 60,000 வரை, விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கண்காட்சியின் இலக்காக, 3 லட்சம் ரூபாய் வரை, விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம். இம்மாதம், 28ம் தேதி, கிருஷ்ண ஜெயந்தி என்பதால், பல்வேறு விதமான கிருஷ்ண சிலைகள் வாங்க, பொதுமக்கள் ஆர்வமுடன் வருகின்றனர். இந்த கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட, அனுமதி இலவசம்,என்றார்.