பதிவு செய்த நாள்
23
ஆக
2013
10:08
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கும் போது, பல ஆண்டுகளாக ஒலித்த முரசு, பயன்பாடினின்றி கிடக்கிறது. ராமேஸ்வரம் கோயில் நடை அதிகாலை, மாலை 4 மணிக்கு திறக்கும் போதும் சுவாமி, அம்மன் சன்னதியில் நடக்கும் 6 கால பூஜை நேரத்திற்கு முன்பும், கோயிலில் முரசு, சேகண்டி, மணி, பேரிகை, நாதஸ்வரம் ஆகிய பஞ்சவாத்தியங்களை முழங்குவது வழக்கமாக இருந்தது. தகவல் தொடர்பு இல்லாத அக்காலத்தில், இதை கேட்டு, பக்தர்கள் கோயிலுக்கு வருவர். சில ஆண்டுகளாக, கோயில் நிர்வாகம், ஆன்மிக மரபுகளை மறந்து வருகிறது. பஞ்சவாத்தியத்தில் ஒன்றான முரசு, கோயில் கிழக்கு வாசல் முன்புள்ளது. நான்கு அடி சுற்றளவு கொண்ட முரசை ஒலிக்கும் போது, ஒரு கி.மீ., சுற்றளவிற்கு சப்தம் கேட்கும். தற்போது, கோயிலில் ஊழியர் பற்றாக்குறையால், முரசு ஒலிக்கப்படவில்லை. வெட்ட வெயில் வைக்கப்பட்டுள்ளது. விஷ்வபரிஷத் கோயில் மடங்கள் பாதுகாப்பு பிரிவு, மாநில இணை செயலாளர் சிவராஜன் கூறியதாவது: இந்து அறநிலைத்துறை சட்டம் 25 பிரிவின்படி கோயிலை பாதுகாக்க பூஜைகள், ஆன்மிக மரபை, அதிகாரிகள் பின்பற்ற வேண்டும். ஆனால், ராமேஸ்வரம் கோயில் முரசு உட்பட பலவாத்தியங்களை வாசிப்பது இல்லை. இது, ஆன்மிக மரபிற்கு எதிரானது, என்றார். கோயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தினமும் பூஜை நேரத்திற்கு முன், முரசு ஒலிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.