பதிவு செய்த நாள்
23
ஆக
2013
10:08
திருத்தணி: முருகன் மலைக்கோவிலில், பல ஆண்டுகளாக அமலில் இருந்த, தொலைதூர தரிசனம் நீக்கப்பட்டுள்ளது. தற்போது, மூலவரை அருகில் இருந்து, தரிசிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருத்தணி முருகன் கோவிலுக்கு, தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர். மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், 50 ரூபாய் மற்றும் 100 ரூபாய், சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் மட்டும், மூலவர் அருகில் (நான்கு அடி தூரத்தில்) நின்று மூலவரை தரிசிக்கலாம். 25 ரூபாய் மற்றும் இலவச தரிசனத்தில், பக்தர்கள் மூலவரை தரிசிப்பதற்கு தொலை தூரம் (12 அடி தூரத்தில்) தரிசனத்திற்கு அனுமதித்து வந்தனர். மலைக்கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும்(இலவச தரிசனம்) மூலவர் அருகில் நின்று தரிசனம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என, பக்தர்கள் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மற்றும் கோவில் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தனபால், முதல் முறையாக திருத்தணி முருகன் கோவிலில், தொலை தூர தரிசனத்தை ரத்து செய்து, சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்களும், இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களும் ஒரே இடத்தில், மூலவருக்கு அருகில், அதாவது நான்கு அடி தூரத்தில் இருந்து சுவாமி தரிசிப்பதற்கு அனுமதி அளித்தார். ஆணையரின் உத்தரவை தொடர்ந்து, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் (பொறுப்பு) திருமகள், ஆகியோர் துணையுடன் கடந்த மூன்று நாட்களுக்கு முன் தொலை தூர தரிசனத்திற்கு பதில், (இலகு) அருகில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுப்பி வைத்தனர். தற்போது, சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் மற்றும் இலவச தரிசனத்திற்கு வரும், பக்தர்கள் சமம் என்ற முறையில், மூலவர் நுழைவு அருகில், நான்கு வரிசையில், இருந்து பக்தர்களை ஒன்றாக இணைந்து மூலவர் அருகில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நடைமுறைக்கு, அனைத்து தரப்பில் இருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது.