பதிவு செய்த நாள்
23
ஆக
2013
10:08
சென்னை: மதுரையில் உள்ள, பசுமை நடை என்ற அமைப்பு, ஒவ்வொரு மாதமும், அந்த மாவட்டத்தில், தொல்லியல் சிறப்பு வாய்ந்த கிராமங்களுக்கு, பொதுமக்களை அழைத்துச் சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இம்மாதம், 25ல், அதன், 25வது நடைபயணம், கீழக்குயில் குடியில் உள்ள, சமணர் மலை அடிவாரத்தில் துவங்குகிறது.
மதுரை மாவட்டத்தில், தொல்லியல் சிறப்பு வாய்ந்த, பல்வேறு இடங்களுக்கு, பொதுமக்களை அழைத்துச் சென்று, அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து, பசுமை நடை என்ற அமைப்பு, விருட்சத் திருவிழா என்ற பெயரில், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதில், ஒவ்வொரு மாதமும், ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமையில், ஒரு இடத்தில் கூடுவர். அந்த இடத்தின் தொல்லியல் சிறப்பு குறித்து, வரலாற்று ஆய்வாளர் விளங்குவார். காலையில் இருந்து மாலை வரை, சமண வரலாற்றுத் தலங்களுக்குச் செல்வர். எஸ்.எம்.எஸ்., - டிவிட்டர் - பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு சமூகவலைதளங்கள் மூலம், இவர்கள் தொடர்பில் உள்ளனர். இதன், 25 வது விருட்சத் திருவிழா, இம்மாதம், 25ல், கீழக்குயில் குடியில் உள்ள, சமணர் மலை அடிவாரத்தில் உள்ள, பெரிய ஆலமரத்தடியில் நடக்கிறது. இதில், வரலாற்று ஆய்வாளர் தொ.பரமசிவம், மதுரை மாநகராட்சி கமிஷனர், நந்தகோபால், எஸ்.பி., பாலகிருஷ்ணன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர், ஜெயசிங் ஞானதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
இது குறித்து, பசுமை நடை அமைப்பினர் கூறியதாவது: சமணர் வரலாற்று தலங்கள் இருக்கும் இடங்களில், மதுரை மாவட்டம் முக்கியமானது. ஆனால், அதை,கிரானைட் மாபியாக்கள் அழித்து வருகின்றனர்; பொதுமக்கள், அதன் சிறப்பை அறியாமல் விட்டு விட்டனர். சமூக விரோதிகள், சமூக விரோத காரியங்களுக்கு, அதை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், நம் கண் முன்னே, மிகப்பெரிய வரலாறு அழியும் அபாயத்தில் உள்ளது. பொதுமக்கள், அந்த இடத்தை அடிக்கடி பயன்படுத்தி வந்தால், சமூக விரோதிகள், அந்த இடத்தை பயன்படுத்த தயங்குவர். அதற்காகவே, பசுமை நடை, அந்த இடங்களுக்கு அழைத்துச் செல்கிறது. ஒவ்வொரு மாதமும், குறைந்த பட்சம், 200 பேராவது கலந்து கொள்வர். இதன் மூலம், அடுத்த தலைமுறைக்கும், நமது மண்ணின் பெருமையும், அதை காக்க வேண்டிய கடமையும் தெரிய வரும். இதில், மிகச் சிறந்த வரலாறு, சுற்றுச்சூழல் போன்றவற்றின் ஆய்வாளர்கள் கலந்து கொள்வதால், இருட்டடிப்பு செய்யப்பட்ட மதுரை மண்ணின் உண்மையான வரலாறும், பொதுமக்களுக்கு தெரிய வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.