பதிவு செய்த நாள்
27
ஆக
2013
10:08
ராசிபுரம்: சிங்களாந்தபுரம் விநாயகர், மாரியம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர்.
ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரத்தில் விநாயகர், மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இக்கோவிலில், கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இக்கோவில் கருவறையில் உள்ள தெய்வங்கள், உட்பிரகாரம், கோபுர வேலைபாடுகள், கலசங்கள் போன்றவை மிகுந்த பொருட்செலவில், திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து, கடந்த, 22ம் தேதி கிராம சாந்தியுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, விநாயகர் பூஜை, சங்கல்பம், கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், முளைப்பாலிகை, புனித தீர்ததம் ஊர்வலம் நடந்தது. மேலும், பூமிதேவி பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது. நேற்று, அதிகாலை, 5 மணிக்கு, நான்காம் கால யாக பூஜையும் தொடர்ந்து, மகா மாரியம்மன் விமான கோபுரம் மற்றும் மூலஸ்தான கோபுரத்துக்கு, கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. அதையடுத்து, சிறப்பு அலங்காரத்தில் ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர்.