பதிவு செய்த நாள்
27
ஆக
2013
11:08
புதுச்சேரி: நவராத்திரி கொலுவிற்காக, அரியூர் கிராமத்தில் தயாராகும் களிமண் பொம்மைகள் சென்னை, மும்பை நகரங்களுக்கு அனுப்பப்படுகின்றன.ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில், கொலு வைப்பது முக்கிய அம்சமாக உள்ளது. படிகட்டுகள் அமைத்து, அதில் கொலு பொம்மைகள் அடுக்கி வைத்து, 9 நாட்கள் வழிபாடு நடக்கும். நவராத்தி விழா, வரும் நவம்பர் மாதம் துவங்குகிறது.நவராத்திரி கொலுவிற்காக, அரியூர் கிராமத்தில் களிமண்ணால் ஆன சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.ஆந்திரா மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த ராஜா, அவரது மனைவி சாமுண்டீஸ்வரி ஆகியோர் அரியூர் கிராமத்தில் குடியேறி, கடந்த 2 ஆண்டுகளாக களிமண் சிலைகள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜா, காகித கூழால் சிலை தயாரிப்பிலும், அவரது மனைவி சாமுண்டீஸ்வரி, களிமண் சிலை தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.ஒரு லோடு களிமண் 3300 ரூபாய்க்கு வாங்கி, அதில் சிலைகள் தயாரிக்கின்றனர். இங்கு, அரை அடி உயரம் முதல் 2 அடி உயரம் வரை சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. சரஸ்வதி, லட்சுமி, அஷ்டலட்சுமி, பெருமாள், சக்கரதேவர், முருகன், வள்ளி தெய்வானையுடன் முருகன், கிருஷ்ணர், வெண்ணை கிருஷ்ணர் என பல்வேறு விதமான சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.கலை நயத்துடன் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் உருவாக்கப்படும் களிமண் பொம்மைகளை தீயில் சுட்டு, சென்னைக்கு அனுப்புகின்றனர். அங்கு, சிலைகளுக்கு வண்ணம் தீட்டி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.களி மண்ணால் செய்யும் சிலை ஒன்றிற்கு, வியாபாரிகள் 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வழங்குகின்றனர். நாள் ஒன்றிற்கு, ஒருவர் 25 சிலைகளை செய்ய முடியும். குடிசை தொழிலாக செய்யப்படும் இத் தொழிலில் நாள் ஒன்றிற்கு, 300 ரூபாய் வருமானம் கிடைப்பதாக சிலை தயாரிப்பாளர் சாமுண்டீஸ்வரி தெரிவித்தார்.