பதிவு செய்த நாள்
28
ஆக
2013
10:08
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், தேர் நிற்கும் பகுதியில், சிமென்ட் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, நேற்று துவங்கியது. ஆண்டாள் கோயில் தேர் ,மதுரை- ராஜபாளையம் மெயின் ரோட்டில், நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது ரோடு உயர்ந்த நிலையில் உள்ளது. இதனால், தேர் நிற்கும் பகுதி , பள்ளமாக காணப்படுகிறது. கடந்த 9ம் தேதி நடந்த தேரோட்டத்தின் போது, தேர் நிலையிலிருந்து வெளியே கிளம்புவதற்கு சிரமம் ஏற்பட்டு, காலதாமதம் ஏற்பட்டது. இதை தவிர்க்க ,அப்பகுதியில் ரோடு உயரத்திற்கு, சிமென்ட் கான்கிரீட் தளம் அமைக்க, முடிவு செய்யப்பட்டது. நேற்று உபயதாரர் மூலம் ,இப்பணி துவங்கியது. காலையில் டிராக்டர்கள், மணல் அள்ளும் இயந்திரம், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் தேரை, சிறிது தூரம் இழுத்து நகர்த்தி நிறுத்தினர். பின், கான்கிரீட் அமைப்பதற்காக, ஏற்கனவே இருந்த இடத்தில், பள்ளம் தோண்டி, தரை சமதளப்படுத்தப்படும் பணி துவங்கியது. தக்கார் ரவிச்சந்திரன், கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். கான்கிரீட் அமைக்கும் பணிக்காக, பஸ் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராஜபாளையத்திலிருந்து மதுரை வரும் வாகனங்கள், மேல ரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக, ராஜபாளையம் ரோட்டில் சந்திக்கும் படியாக மாற்றி விடப்பட்டுள்ளது. கீழ ரதவீதி பகுதி, ஒரு வழி பாதையாக இருப்பதால், போக்குவரத்து நெருக்கடி சிரமமின்றி மக்கள் எளிதாக சென்று வருகின்றனர்.