*நீ உன்னுடைய வேலையை இறைவனுக்கு நைவேத்யமாக அர்ப்பணித்து விட்டால், தியானம் என்பதே தேவையில்லை. உன் பணியில் நீ செலுத்தும் கவனம் தியானத்தை விட உயர்ந்தது. *மேகக்கூட்டம் போல் சிரமங்கள் சூழ்ந்தாலும், அவற்றை உன் இதழ்களில் தவழும் புன்சிரிப்பு என்னும் சூரியன் காணாமல் செய்துவிடும். *ஆர்வம், விழிப்புணர்வு ஒருவனிடம் இருந்து விட்டால், ஒவ்வொருநாளும் அவன் லட்சியத்தை நெருங்கிக் கொண்டிருப்பான். *பிறர் விஷயங்களில் ஒருபோதும் தலையிட விரும்பாதே. கேட்காமல் யாருக்கும் ஆலோசனை வழங்காதே. *பணியிலுள்ள சிரமத்தைப் பற்றி தொல்லைப்பட்டுக் கொள்ளாதே. மனதில் சாந்தம் எப்போதும் நிலவும்படி செய். *பேசாதே, செயல்படு... இதை உன் மனதில் குறித்துக்கொள். வார்த்தைகள் ஒருபோதும் தேவையில்லை. செயலே வாழ்வின் ஆதாரம். *தன்னம்பிக்கையுடன் இரு. நேர்மையோடு பிரார்த்தனை செய். நீ கேட்டதை இறைவன் தவறாமல் தந்தருள்வார். *தாமதமாக தோன்றும் இரக்கம் பாராட்டுக்கு உரியதல்ல. தக்க நேரத்தில் உன்னால் இயன்ற உதவிகளைச் செய்துவிடு. *அச்சம் என்பது பெரும்மாசு. அற்பமானதும், பலவீனமானதுமான சிறுமைக்கு வாழ்வில் இடமளிக்காதே. நீ இறைவனுக்குச் சொந்தமானவன். எதைக் கண்டும் பயப்படத் தேவையில்லை. *வாழ்வின் வெற்றி என்பது, ஒருவன் உண்மையைக் கடைபிடிப்பதைப் பொறுத்தது. *நேர்மையாக இருப்பது போல பாசாங்கு செய்யாதே. தன்னை செம்மைப்படுத்திக் கொண்டு நேர்மையை வளர்த்துக் கொள்வதே சிறந்தது. *பலசாலிகள் வெற்றியைத் தேடி ஓடுவதில்லை. அது தங்களைத் தேடி வரும்போதே ஏற்றுக் கொள்வார்கள். *மற்றவர்கள் உங்களிடம் நல்லவர்களாக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நல்லவர்களாக இருக்கக் கூடாது. நல்லவனாக இருப்பதற்காகவே, நீ நல்லவனாக இரு. *நோய் எதுவுமே கடுமையானது அல்ல. மருத்துவர் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. நீ ஏற்றுக்கொண்டாலன்றி அந்த நோய் உன்னை எதுவும் செய்ய முடியாது. நோயாளியின் நம்பிக்கை தான் குணமடையும் ஆற்றலைத் தரும் அருமருந்து. *எவ்வளவு தூரம் கடவுளை நம்புகிறாயோ, அவ்வளவு தூரம் உன் துன்பங்கள் உன்னை விட்டு பறந்தோடும். *வாழ்வில் சாதிக்க விரும்புபவனுக்கு ஒருமுகப் படுத்தும் திறன் அவசியம். ஒரு மனிதனின் மதிப்பு அவனுடைய கவனசக்தியை பொறுத்ததே. *முன்னேறுவதற்காகவே நீ பிறந்திருக்கிறாய். அதனால், வாழ்வில் நீ எவ்வளவோ கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. *கோபத்தை அடக்கு. முரட்டுத்தனம் கண்ணீரில் தான் முடியும். எந்தச் சூழலிலும் மனம் கலங்காமல் அமைதியுடன் இரு. *நீ பிறர் மீது ஆட்சி செலுத்த வேண்டுமானால் உன் மீது நீ ஆட்சி செலுத்தும் திறன் பெற்றிருக்க வேண்டும். *லட்சியவாதி தன் குறிக்கோளை தம்பட்டம் அடிக்க மாட்டான். தான் செய்து முடித்ததை பிறர் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கவும் மாட்டான். *துணிவு மிக்கவன் எத்தனை தோல்விகளை சந்தித்தாலும், இறுதிவரை வெற்றிக்காக போராடிக் கொண்டிருப்பான். நல்வழி நிச்சயம் அவனுக்கு கிடைத்திடும். -ஸ்ரீஅன்னை