பதிவு செய்த நாள்
29
ஆக
2013
10:08
மேட்டூர்: கோனூர் சென்றாய பெருமாள் கோயில் தோரோட்டம், இரண்டாவது ஆண்டாக ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். மேட்டூர் அடுத்த கோனூரில், பழமையான சென்றாய பெருமாள் கோயில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் கோனூர், மோட்டூர், பொறையூர், திப்பம்பட்டி, வீரனூர், மடத்துபட்டி, கூளையூர், சந்தைதானம்பட்டி, ஆண்டிக்கரை, பூரல்கோட்டை உள்பட, 27 கிராம மக்கள் வழிபாடு செய்கின்றனர். கோவிலில் பல ஆண்டு பூசாரியாக இருந்த திருவேங்கடம் முறைகேடு செய்துள்ளார். பூசாரி திருவேங்கடத்தை நீக்கி விட்டு, அதேபகுதியை சேர்ந்த சம்பத் என்பவரை பூசாரியாக நியமிக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். நீக்கப்பட்ட திருவேங்கடம், நான் தான் பரம்பரை அறக்காவலர் மற்றும் பூசாரி எனகூறி கோவிலில் பூஜை செய்ய நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கினார். எனினும், திருவேங்கடத்தை பூசாரியை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கிராமமக்கள் அப்பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். எனினும், நீதிமன்ற உத்தரவுபடி அறநிலையத்துறை அதிகாரிகள் திருவேங்கடத்தை பூசாரியை நியமித்தனர். ஆண்டுதோறும் ஆவணி மாதம் சென்றாய பெருமாள் கோவில் தேரோட்டம் நடக்கும். மாலை 4 மணிக்கு தேரோட்டம் துவங்கும். தேர் கோனூர், ஆண்டிக்கரை வழியாக சென்று, மறுநாள் காலை நிலையை அடையும். திருவேங்கடத்துக்கு பதில் வேறு ஒருவரை பூசாரியாக நியமிக்காவிடில் தேரோட்டம் நடத்த மாட்டோம் என, கிராம மக்கள் தெரிவித்தனர். இதனால், கடந்த ஆண்டு சென்றாய பெருமாள் கோயில் ஆவணி தேரோட்டம் நடக்கவில்லை. நடப்பாண்டிலும் திருவேங்கடமே பூசாரியாக நீடிக்கிறார். இதனால், நடப்பாண்டில் இன்று நடக்க இருந்த தேரோட்டத்தையும் பக்தர்கள் ரத்து செய்தனர். இரண்டு ஆண்டாக தேரோட்டம் நடக்காதது பக்தர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. போலீஸ் பாதுகாப்புடன் கோனூர் சுற்றுப்பகுதி மக்கள் சென்றாய பெருமாள் கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.