பதிவு செய்த நாள்
03
செப்
2013
10:09
பேரூர்: தொண்டாமுத்தூர் அருகே வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 8ம் தேதி நடக்கிறது. உலியம்பாளையம் கிராமத்தில் வரசித்திவிநாயகர், மாகாளியம்மன், பாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம், வரும் 6ம் தேதி மாலை மூத்தபிள்ளையார் வழிபாட்டுடன் துவங்குகிறது. பின், திருக்குடங்கள் வேள்விச்சாலைக்கு புறப்பாடாகி, முதல்கால வேள்வியான 108 மூலிகைப்பொருட்கள் ஆகுதி, மலர்வழிபாடுகள் நடத்தப்படுகிறது. மறுநாள்(7ம்தேதி) காலை திருப்பள்ளியெழுச்சி, இரண்டாம் கால வேள்வி, மாலை எண்வகை மருந்து சாத்துதல் நடத்தப்பட்டு, மூன்றாம் காலவேள்வியும், மூலமூர்த்திகளுக்கு எண்வகை மருந்து சாத்துதலும் நடக்கிறது. இதையடுத்து, வரும் 8ம் தேதி அதிகாலை 5.00 மணிக்கு, நான்காம் கால வேள்வி நடத்தப்பட்டு, திருக்குடங்கள் திருக்கோவிலை வலம் வந்து, சிரவையாதீனம் குமரகுருபர சாமி தலைமையில், பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள் முன்னிலையில், காலை 7.00 மணிக்கு திருக்குட நன்னீராட்டு விழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக் குழுவினர் செய்து வருகின்றனர்.