பதிவு செய்த நாள்
05
செப்
2013
11:09
சமீபத்தில் வெளியான அரசு உத்தரவுப்படி, சங்க கால வரலாற்று பொருட்களும், பல்வேறு காலகட்டங்களை சேர்ந்த கல்வெட்டுக்களும் நிறைந்த, விழுப்புரம் மாவட்டம், ஜம்பை பகுதியில் உள்ள, 10 ஹெக்டேர் நிலம், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ளது, ஜம்பை கிராமம். தென் பெண்ணையாற்றின் வடகரையில், இப்பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில், கற்காலம் முதல் தற்போதைய காலம் வரை, பல்வேறு வரலாற்று ஆதார பொருட்கள் கிடைத்து வருகின்றன. அது மட்டுமின்றி, புதிய கற்கால கருவிகளும் இங்கு கண்டெடுக்கப்பட்டன. இங்குள்ள ஜம்பை மலைப்பகுதியில், 2,000 ஆண்டுகளுக்கு முன், சேர மன்னன் அதியமான், அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்தது குறித்த, கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
132 கல்வெட்டுகள்: ஜம்பையை சுற்றியுள்ள வயல் வெளிகளில், சங்க காலத்தை சேர்ந்த, கறுப்பு, சிவப்பு பானை ஓடுகள், குறியீடு பொறித்த பானை ஓடுகள், தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், உடைந்த முதுமக்கள் தாழியின் தடித்த ஓடுகள், இடைக்கால பானை ஓடுகள், செங்கற்கள், கூரை வேயும் ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், இரண்டு சோழர் காசுகளும், ஒரு முஸ்லிம் ஆட்சிக்காலத்து காசும், சுடுமண் பொருட்களும் கிடைத்தன. ஜம்பையில்,132 கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை, பெரும்பாலும், அங்குள்ள, ஜம்புநாதர் கோவில், அகிலாண்டேஸ்வரி கோவிலிலும், மீதமுள்ளவை பிற கோவில்களிலும், ஊரைச் சுற்றிஉள்ள குன்றுகளிலும் உள்ளன. ஜம்பையில் கல்வெட்டுக்கள் அமைந்த பகுதியை, 1966ல் கொண்டு வரப்பட்ட சட்டத்தின் படி, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர, மூன்று ஆண்டுகளுக்கு முன், தொல்லியல் துறை ஆணையர், அரசுக்கு கடிதம் எழுதினார். இதை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள, 10 ஹெக்டேர் அரசு புறம்போக்கு நிலத்தை, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான அரசு உத்தரவு, சமீபத்தில் வெளியிடப்பட்டது. உத்தரவுப்படி, இப்பகுதி, தொல்லியில் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
தொல்லியல் துறை அகழாய்வு: ஸ்ரீரங்கத்தில் உள்ள, ரங்கநாதர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில், தொல்லியல் துறை அகழாய்வு செய்ய உள்ளது. திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோவிலில், ஆயிரம் கால் மண்டபம், வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இதன் அடிப்பகுதி புதைந்திருந்தது, சமீபத்தில் தெரிய வந்தது. இந்நிலையில், ஆயிரங்கால் மண்டபத்தை சுற்றி, அகழாய்வு செய்ய, தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது. அரசின் அனுமதிக்கு பிறகு, அகழாய்வு துவங்கும். - நமது நிருபர் -