பதிவு செய்த நாள்
11
மார்
2011
03:03
காஞ்சிபுரம் திரும்பிய காடுவெட்டி சோழனுக்கு தான் கண்ட சோமசுந்தரரின் திவ்யதரிசனத்தை மறக்க முடியவில்லை. எப்போதும் அவரையே நினைத்துக் கொண்டிருந்தான். அடிக்கடி மதுரை வந்து அவரைத் தரிசிக்க பேராவல் கொண்டான். தனது எண்ணம் நிறைவேற வேண்டுமானால், ராஜேந்திர பாண்டியனின் நட்பைப் பெறுவதே ஆகும் என்று எண்ணினான். நட்பைப் பெறுவதன் முதல் கட்டமாக தங்க, வைர ஆபரணங்களையும், பாண்டியநாட்டில் கிடைக்காத சில அதிசயப் பொருட்களையும் அமைச்சர் ஒருவர் மூலமாகக் கொடுத்தனுப்பி, பாண்டியநாட்டின் நட்பை வேண்டி ஒரு ஓலையும் எழுதியிருந்தான். ராஜேந்திர பாண்டியனுக்கு சோழனின் சிவபக்தி பற்றி தெரியும் என்பதால், அவனது காணிக்கையை அன்புடன் ஏற்றுக் கொண்டான். அந்த அமைச்சரிடம் பாண்டியநாட்டு முத்துமாலை களையும் இன்னும் வித்தியாசமான பொருட்களையும் பதில் காணிக்கையாக அனுப்பி வைத்தான். இப்படி இவர்களின் நட்பு எல்லை குடும்ப உறவை ஏற்படுத்தி கொள்ளுமளவுக்கு வளர்ந்தது. மன்னன் காடுவெட்டிக்கு பேரழகு மிக்க மகள் இருந்தாள். அவளை இளைஞனான ராஜேந்திர பாண்டியனுக்கு கொடுத்து சம்பந்தம் ஏற்படுத்திக் கொள்வதன் மூலம், இருதரப்பு உறவும் விரிவடைவதுடன், மகள் வீட்டில் தங்கி, தக்க மரியாøதைகளுடன் அன்னை அங்கயற்கண்ணியையும், சோமசுந்தரரையும் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்குமே என அவன் எண்ணினான். ஆனால், இந்த ஏற்பாட்டிற்கு வேட்டு வைக்க நினைத்தான் ராஜேந்திர பாண்டியனின் தம்பியான ராஜசிம்மன். அவன் பாண்டிய பரம்பரைக்கே ஒரு களங்கம். பழிபாவம் என்பதெல்லாம் அவனுக்கு சர்க்கரைப் பொங்கல் போல் இனிக்கும். எந்த ஒரு கொடிய செயலுக்கும் தயங்கமாட்டான். அண்ணனை ஆட்சிக்கட்டிலில் இருந்து கவிழ்த்து விட்டு, சோழராஜகுமாரியை மணந்து கொண்டு, இரண்டு நாடுகளையும் நிர்வகிக்கலாம் என திட்டமிட்டான். ஆசையிலும் இது பேராசையல்லவா! அவன் அண்ணனுக்குத் தெரியாமல் சோழநாட்டுக்கு விரைந்தான். மன்னன் காடுவெட்டி அவனை இன்முகத்துடன் வரவேற்றான். மருமகனாகப் போகிறவனின் தம்பியல்லவா! வந்த விஷயத்தைக் கேட்டான். மன்னர்களின் பலவீனம் அறிந்து பேசுவதில் வல்லவன் ராஜசிம்மன்.
சோழமாமன்னரே! தாங்கள் என் சகோதரனுக்கு தங்கள் பெண்ணைக் கொடுத்து இருநாட்டு உறவையும் வளர்க்க எண்ணுகிறீர்கள். திருமண உறவுக்குப் பிறகும், அவர் எந்தளவுக்கு உங்களுடன் உறவு கொள்வார் என்பது சந்தேகத்திற்குரியதே! நான் அப்படிப்பட்டவன் அல்ல! ஒருவர் ஒரு உதவி செய்தால் அதை கடைசி வரை மறக்கமாட்டேன். எனவே, தங்கள் குலவிளக்கை நான் திருமணம் செய்து கொள்கிறேன். நாம் இருவரும் அனுசரணையாக இருக்கலாம், என்று பக்குவமாக பவ்யமாக பணிவு காட்டுவது போல பேசினான். பேசுவார் பேசினால் கல்லும் கரையுமே! ராஜசிம்மனின் பேச்சில் காடுவெட்டி கரைந்து போனான். மேலும், பாண்டியநாட்டைத் தேடி சோழன் சென்றான் என்ற அவச் சொல்லை விட, சோழனைத் தேடி பாண்டியன் வந்து உறவு கொண்டான் என்பது எவ்வளவோ உயர்வானதல்லவா என்று கணக்குப் போட்டான். மறுபேச்சின்றி, திருமணத்துக்கு சம்மதித்து விட்டான். அடுத்து ராஜேந்திரனை பதவியில் இருந்து தூக்கிவிட்டு, மருமகனை பாண்டிய மன்னனாக்க தீர்மானித்தும் விட்டான். ராஜேந்திரனுக்கு தெரியாமலேயே இவ்வளவும் முடிந்து விட்டது.உடனடியாக திருமண ஏற்பாடுகளைச் செய்த காடுவெட்டி, தன் நாட்டில் வைத்தே திருமணத்தையும் முடித்து விட்டான். பின்னர் பாண்டியநாட்டுக்கு ஓலை ஒன்றை அனுப்பினான். ராஜேந்திர பாண்டியரே! உமது சகோதரர் ராஜசிம்மன் என் மகளை மணந்து புது உறவை ஏற்படுத்திக் கொண்டார். இனி, பாண்டியநாடு எங்களுக்கே சொந்தம். நீரே நாட்டை ஒப்படைத்து விட்டால் போருக்கு இடமில்லை. மறுத்தால், இரு நாடுகளும் போர்ப்பிரகடனம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை, என அதில் எழுதப்பட்டிருந்தது. துரோகியான தன் தம்பிக்கும், சிவபக்தன் போல் வந்து தன் ஊரையே பிடிக்க வந்து விட்ட சோழனுக்கும் தக்க பாடம் புகட்ட முடிவு செய்துவிட்டான் ராஜேந்திரன். அவனும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பு செய்து, துரோகிகளை வெல்வதற்கு படைகளைத் திரட்டினான். இதற்குள் சோழமன்னன் மதுரை எல்லைக்கு வந்து காத்திருந்தான். ராஜேந்திரன் சொக்கநாதர் சன்னதிக்குச் சென்று, ஐயனே! சோழனின் அநியாயத்தைப் பார்த்தீர்களா! ஒரு துரோகிக்கா நீங்களே வழிகாட்டி கோயிலுக்கு அழைத்து வந்தீர்கள். அநியாயம் செய்பவருக்கு தாங்களே துணை போவது முறையா? இப்போது சொல்கிறேன். என் எதிரிப்படை ஊருக்குள் நுழையாத அளவுக்கு கோட்டைக் கதவுகளை தாழிடுவேன். எந்தக் கதவையும் திறக்கவிடாமல் செய்வது உம் பொறுப்பு, என்றான். அப்போது அசரிரீ ஒலித்தது.
ராஜேந்திரா! கவலைப்படாதே! நாளை நீ உனது சதுரங்க சேனையுடன் சோழன் முகாமிட்டிருக்கும் மதுரையின் எல்லைக்குச் செல். உன் படைகளை அவனுடன் மோதவிடு. நான் பார்த்துக் கொள்கிறேன், என்றது. இதை சோமசுந்தரரின் கட்டளையாகவே ஏற்ற பாண்டியன் மனம் மகிழ்ந்தான். வெற்றி தனக்கே என்ற நம்பிக்கையுடன் அரண்மனைக்கு வந்து, சதுரங்க சேனையைத் தயார்படுத்த தளபதிகளுக்கு உத்தரவிட்டான். அன்றிரவு நிம்மதியாகத் தூங்கினான். மறுநாள் காலையில், தானே தலைமை வகித்து சதுரங்க சேனையுடன் நகரின் எல்லைக்குச் சென்றான். அங்கோ சோழர்படை கடல்போல் குவிந்து நின்றது. அந்த படைபலத்தின் முன் பாண்டியனின் படைபலம் மிகச்சாதாரணமே! சோமசுந்தரரின் துணையிருக்கும் போது, அதுபற்றி பாண்டியன் கவலைப்படவில்லை. சோழப்படையின் வியூகத்தை உடைத்துக் கொண்டு பாண்டியனின் படை நுழைந்தது. இரு தரப்புக்கும் கடும் போர். மன்னன் ராஜேந்திரன், காடுவெட்டியுடன் மோதினான். காடுவெட்டிக்கு ஆதரவாக இருந்த ராஜேந்திரனின் தம்பி ராஜசிம்மனும் போரிட்டான், அவர்களை மிகலாவகமாக ராஜேந்திரன் சமாளித்துக் கொண்டிருந்தான். அந்நேரத்தில், சோமசுந்தரர் தனது நாடகத்தைத் துவங்கினார். போர்க்களத்தில் நடந்த சண்டையில், ஆயுதங்கள் ஒன்றுக்கொன்று மோதும் போது ஏற்பட்ட நெருப்பு பொறிகளில் இருந்து கடும் உஷ்ணத்தை உண்டாக்கினார். இந்த வெப்பத்தைத் தாங்க முடியாமல், இருதரப்பினரும் சோர்வடைந்தனர். தாகம் நாக்கை வறட்டியது. சுற்றிலும் எங்கும் தண்ணீரும் இல்லை. இந்த நேரத்தில் சோமசுந்தரர் போர் நடந்த இடத்தின் ஒரு பக்கமாக தண்ணீர்ப்பந்தல் ஒன்றை உருவாக்கினார். சிவனடியார் போல் இடமிட்டு அங்கே அமர்ந்தார். நீர்மோர் பாத்திரங்களை அங்கு நிறைத்தார். இந்தப் பந்தலை நோக்கி படையினர் ஓடினர். சோமசுந்தரர் குவளைகளில் நீர்மோரை ஊற்றிக் கொடுத்தார். ஆனால், பாண்டியர் படைகளுக்கு மட்டுமே மோர் கிடைத்தது. சோழர் படையில் ஒருவருக்குக் கூட கிடைக்கவில்லை. ஊற்றியவர் சோமசுந்தரர் அல்லவா! மீண்டும் போர் துவங்கியது. தாகத்தால் சோர்ந்து போன சோழப்படையினரால் மேற்கொண்டு செயல்பட முடியவில்லை. எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும் தாகத்தால் தவித்த அவர்கள் சக்தியின்றி தோற்று ஓடினர். காடுவெட்டியும், ராஜசிம்மனும் தனித்து விடப்பட்டனர். பாண்டியப் படையினர் அவர்களைச் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதெல்லாம் எப்படி நடந்தது என்று ராஜேந்திரனால் நம்பவே முடியவில்லை. எல்லாம் வல்ல அந்த ஈசன், தண்ணீர் பந்தல் அமைத்து மோர் வழங்கியதால் ஏற்பட்ட சக்தியே தங்களைக் காப்பாற்றியது என்பதை உணர்ந்து கண்ணீர் வடித்தான். இந்த சம்பவத்தின் மூலம், துரோகிகளுக்கும், அநியாயம் செய்பவர்களுக்கும் இறைவன் குடிக்கத் தண்ணீர் கூட இல்லாமல் செய்து விடுவான் என்பது தெளிவாகிறது. கைதான இருவரும் அரசவைக்கு விலங்குடன் இழுத்து வரப்பட்டனர். அவர்களுக்கு என்ன தண்டனை தரப்படுமோ என்ற ஆவலுடன் அனைவரும் எதிர்பார்ப்புடன்இருந்தனர். அவர்கள் இருவருமோ தலை குனிந்து நின்றனர். ஆனால், யாரும் எதிர்பாராதவகையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.ராஜேந்திரன் காடுவெட்டியிடம், சோழ மன்னரே! என்ன தான் நீர் மண்ணாசை கொண்டிருந்தாலும், சிவபக்தராக விளங்கினீர். உமக்கு பொன்னும், பொருளும் பரிசாகத் தருகிறேன். நீர் உமது நாட்டுக்குச் செல்லலாம், என்றான். அடுத்து துரோகியான தன் தம்பி ராஜசிம்மனிடம், தம்பி! உனக்கு பாண்டியநாட்டின் ஒரு பகுதியைத் தருகிறேன். அதன் அரசனாக நீ இருக்கலாம், என்றான். அவர்கள் தங்கள் தவறுக்காக ராஜேந்திரனிடம் மன்னிப்பு கேட்டனர். மிஞ்சிய படைகளுடன் காடுவெட்டி ஊருக்கு கிளம்பி விட்டான். ராஜசிம்மன் மன்னனாகி விட்டான். ராஜேந்திரன் மாபெரும் சக்தியாக விளங்கினான்.