பதிவு செய்த நாள்
10
செப்
2013
10:09
பிள்ளையார்பட்டி: சிவகங்கை மாவட்டம்,பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில்,விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு,நேற்று காலை 10.20 மணிக்கு, கோயில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. ஆக.,31ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் காலை வெள்ளிக்கேடகத்தில் சுவாமி புறப்பாடு, இரவில் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் மாலை, மூலவர் கற்பகவிநாயகர் சந்தனக்காப்பில் அருள்பாலிக்க, தேரோட்டம் நடந்தது. நேற்று காலை, தங்க கவசத்தில் அருள்பாலித்த விநாயகருக்கு, சிறப்பு பூஜை நடந்த பின்னர், காலை 9.30 மணிக்கு, தங்க மூஷிக வாகனத்தில் விநாயகர், சண்டிகேஸ்வரர், அங்குசத்தேவர் ஆகியோர், திருவீதி வலம் வந்து, கோயில் குளக்கரையில் எழுந்தருளினர். அறங்காவலர்கள் வலையபட்டி ராமனாதன் செட்டியார், காரைக்குடி கண்ணன் செட்டியார் பங்கேற்க, சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. படிக்கரையில், தலைமைக்குருக்கள் பிச்சை சிவாச்சாரியார் தலைமையில், விநாயரின் பிரதிநிதியான அங்குசத்தேவருக்கு அபிஷேகம் நடந்தது. பின் அங்குச்தேவருக்கு சோமசுந்தர குருக்கள் திருக்குளத்தில் மும்முறை மூழ்கி தீர்த்தவாரி நடத்தினார். மதியம் மூலவருக்கு மெகாசைஸ் கொழுக்கட்டை படைக்கப்பட்டது.