பதிவு செய்த நாள்
10
செப்
2013
10:09
ஊட்டி: ஊட்டியில், 5,800 விநாயகர் உருவங்களை சேகரித்துள்ள பெண், சதுர்த்தியை முன்னிட்டு, மெஹந்தியில் 35 உருவங்களை, கைகளில் வரைந்து வியக்க வைக்கிறார். ஊட்டி போலீஸ் துறையில், எஸ்.ஐ.,யாக பணிபுரியும் ஹரியின் மகள், விஷாலி மஞ்சு பாஷினி; விநாயகரின் தீவிர பக்தை. ஆறு ஆண்டுகளில் மட்டும், வித்தியாசமான விநாயகர் உருவங்கள், கீ செயின், படங்கள், கைவினைப் பொருட்களால் ஆன வடிவங்கள், விநாயகர் புகழ் பாடும் புத்தகங்களை சேகரித்து வைத்துள்ளார்; இதற்காகவே, அவரின் வீட்டில் ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. விஷாலினி கூறுகையில், விநாயகர், என் இஷ்டதெய்வம். ஓர் விபத்தில், நான் அணிந்திருந்த விநாயகர் டாலர், என்னை காப்பாற்றியது. அன்று முதல், நான் எப்பகுதிக்கு சென்றாலும், விநாயகர் உருவங்களை வாங்கி சேகரிப்பதை, வழக்கமாக்கி கொண்டேன். பின், உறவினர்கள், நண்பர்கள், விநாயகர் உருவங்களையே, எனக்கு பரிசாக வழங்குகின்றனர். எங்கள் வீட்டில் இதுவரை, 5,800க்கும் மேற்பட்ட விநாயகர் வடிவங்களை, சேகரித்து வைத்துள்ளேன். விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் விதத்தில், மெஹந்தி மூலம், 35 விநாயகர் வடிவங்களை கைகளில் வரைந்துள்ளேன். இந்த முயற்சிக்கு, என் பெற்றோர், ஊக்கம் அளிக்கின்றனர், என்றார். தந்தை ஹரி கூறுகையில், என் மகள் சேகரித்துள்ள விநாயகர் உருவங்கள் குறித்து, லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன; கின்னஸ் சாதனைக்கு தேவையான பணிகளில் ஈடுபட்டுள்ளோம், என்றார்.