பதிவு செய்த நாள்
10
செப்
2013
10:09
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியை அடுத்த பூண்டியில் மாதா பேராலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் புனித கன்னி மரியாளின் பிறப்பு பெருவிழா, ஆக., 30ம் தேதி முதல் செப்., 9ம் தேதி வரை நடத்தப்படும். அதன்படி, நடப்பாண்டு பூண்டி மாதா பேராலயத்தில், குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி, கடந்த, 30ம் தேதியன்று, கொடியேற்றி, விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து, நவநாள் திருப்பலி பூஜைகளை பங்கு தந்தையர் செய்தனர். தொடர்ந்து கடந்த, 8ம் தேதி மாலை, ஆறு மணிக்கு, தன்னடக்கம் எனும் தலைப்பில் குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி அருளாசி வழங்கினார். விழாவில் மல்லிகை மலர்கள், வண்ண விளக்குகள் கொண்டு பூண்டி மாதா தேர் அலங்கரிக்கப்பட்டு பவனி வந்தது. இதில் குடந்தை மறைமாவட்ட முதன்மை குரு பாக்கியசாமி, மைக்கேல்பட்டி மறைமாவட்ட முதன்மை குரு ஜான் பன்னீர்செல்வம் மற்றும் சுற்றுவட்டாரத்திலுள்ள ஆலய பங்கு தந்தையர் பங்கேற்றனர். பூண்டி மாதா தேர்பவனி நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக பங்கேற்று, மாதாவை பிரார்த்தனை செய்தனர். இதற்கான ஏற்பாட்டை பூண்டி மாதா பேராலய அதிபர் மற்றும் பங்கு தந்தை செபாஸ்டின், துணை அதிபர் அருள்சாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர். மேலும் பாதுகாப்பு பணியில், திருக்காட்டுப்பள்ளி இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் போலீஸார் ஈடுபட்டனர்.