பதிவு செய்த நாள்
12
செப்
2013
10:09
பழநி: பழநி திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேகம் தைப்பூசத்திற்கு முன்னதாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான, பழநி திருஆவினன்குடி கோயிலில், 90லட்ச ரூபாய் செலவில் கும்பாபிஷேக பணிகள் நடக்கிறது. கடந்தாண்டு, ஜூலை 18ல் சிறப்பு பூஜை செய்து, கும்பாபிஷேக பணிகள் துவக்கப்பட்டது. முதல் கட்டப்பணியாக, கோபுரங்களில் சாரம் கட்டும் பணி மற்றும் சேதமடைந்துள்ள கோபுரங்களில் உள்ள சுதைகளை புதுப்பித்து, வர்ணம் பூசப்படுகிறது. மயில் மண்டபம் (வெளிப்பிரகாரம்) சுற்றி, சுமார் 16லட்ச ரூபாய் செலவில் கிரைணட் கற்கள் பதிக்கப்பட்டு உள்ளது. கோயிலின் மேல்தளத்தில் சுமார் 6 லட்ச ரூபாய் செலவில் தட்டோடு பதிக்கப்பட்டது. சனீஸ்வரர் சன்னதி மேல் கோபுரம் மிகவும் சிதைந்துள்ளதால், புதிதாக சுதைகளுடன் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. அனைத்து மண்டபங்களிலும் உள்ள ஓவியங்கள், சிலைகள் சுமார் 40 லட்ச ரூபாய் செலவில் வர்ணம் பூசப்படுகிறது. பிற பணிகள் நடந்து வருகிறது. கோயில் இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம் கூறுகையில்,"" திருஆவினன் குடிகோயிலில், அனைத்து பணிகளும் துரிதமாக நடக்கிறது. 21 லட்ச ரூபாய் செலவில் வாஷிங் கெமிக்கல் மூலம் சுவாமி சிலைகள் சுத்தம் செய்யப்பட உள்ளது. கும்பாபிஷேக பணிகளை வருகின்ற தைபூசத்திற்கு முன்னதாக முடிக்க உள்ளோம். விரைவில் குடமுழுக்கு விழா நடக்கவுள்ளது, என்றார்.