பதிவு செய்த நாள்
14
மார்
2011
01:03
அப்போது சிலையினுள் இருந்து சத்தம் எழுந்தது. அம்மா ! தாங்கள் என் நிலைக்காக கவலை கொள்ளக் கூடாது. லட்சுமியைத் தேடி பூலோகம் வந்த என் செயல்பாடுகள் முடிந்து விட்டன. இனி என் அண்ணா கோவிந்தராஜன் இங்குள்ள நிதிநிலவரங்களைக் கவனித்துக் கொள்வார். நீ துளசிமாலையாக மாறி, என் கழுத்தை அலங்கரிப்பாய். எனக்கு இங்கே தினமும் துளசி அர்ச்சனை நடக்கும், என்றார். தன் மகனுடன் துளசிமாலையின் வடிவில் வசிக்கப்போவது கண்டு வகுளாதேவி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. சற்றுநேரத்தில் அவள் துளசிமாலையாகி சீனிவாசனின் கழுத்தை அலங்கரித்தாள். கோவிந்தராஜன் சீனிவாசனிடம், தம்பி ! உனக்கு குவியும் காணிக்கையை அளந்து அளந்து என் கை சலித்து விட்டது. எவ்வளவு அளந்தாலும் குறைந்த பாடில்லை எனக்கு ஓய்வுதேவை. நான் என்ன செய்யட்டும் ? என்றார். அண்ணா ! நீங்கள் அளந்தாலும் அளக்காவிட்டாலும் தங்கள் கைகளில் தனரேகை ஓடுவதால் இங்கே செல்வம் குறையப் போவதில்லை. தாங்கள் இனி அளக்கும் பணியைச் செய்ய வேண்டாம். இந்த மலையடிவாரத்துக்குச் சென்று ஓய்வெடுங்கள். தங்களை வணங்குவோர் எல்லாரும் எல்லா செல்வங்களையும் அடைய தாங்கள் கருணை செய்ய வேண்டும், என்றார் சீனிவாசன். கோவிந்தராஜனும் மலையடிவாரத்துக்கு வந்து ஓரிடத்தில் மரக்காலை தலைக்கு வைத்து சயனித்து விட்டார். அந்தக் கோயில் தான் திருப்பதியில் தற்போதுள்ள கோவிந்தராஜப் பெருமாள் கோயிலாகும். ஆரம்பத்தில் இவ்வூர் கோவிந்தராஜ பட்டணம் என்று தான் அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் தான் திருப்பதி என மாறியது. இவ்வாறாக சீனிவாசனின் குடும்பத்தினர் ஒவ்வொரு இடத்தில் தங்க, பக்தர்கள் பலர் அவரைத் தரிசிக்க குவிந்த வண்ணம் இருந்தனர். ஒருமுறை, வடநாட்டைச் சேர்ந்த பாவாஜி என்ற பக்தர் திருமலைக்கு வந்தார். சீனிவாசனை உளம் குளிர சேவித்த அவருக்கு அவ்வூரை விட்டு செல்ல மனமில்லை. அங்கேயே ஓரிடத்தில் ஆஸ்ரமம் அமைத்து தங்கிவிட்டார். தினமும் புஷ்கரணியில் மூன்று முறை குளியல், ஏழுமலையானின் தரிசனம் என ஏக அமர்க்களமாக பக்தி செலுத்தினார்.
பக்தன் பாவாஜியை பாலாஜிக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. ஒரு நாள், பாவாஜி ஆஸ்ரமத்தில் அமர்ந்திருந்த போது, கட்டம் வரைந்து அதன் முன் அமர்ந்து, மறுபக்கம் ஏழுமலையான் அமர்ந்திருப்பது போல பாவனை செய்துகொண்டு, சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தார். அப்போது, ஒரு அதிசயம் நிகழ்ந்தது. பாவாஜி முன்னால் பேரொளி தோன்றியது. அது கண்ணைப் பறித்ததால் பாவாஜியால் அதைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அவ்விடத்தை விட்டு எழுந்தார். படிப்படியாக ஒளி குறைந்ததும், அங்கே சீனிவாசனின் திவ்யமான சிலை ஒன்று இருப்பதைப் பார்த்தார். அவருக்கு பெரும் ஆனந்தம். சீனிவாசா ! இது என்ன அதிசயம் ! என்னைத் தேடி நீ வந்தாயா ! அதிருக்கட்டும் ! சிலை வடிவில் நீ இங்கு வந்துள்ளதன் மூலம் நான் உனக்கு தினமும் பூஜை செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன். ஆனால், ஏன் நேரில் காட்சி தரவில்லை. உனக்காக இவ்வளவு நேரமும் சொக்கட்டான் ஆடினேனே ! ஒருநாளாவது என்னோடு நீ விளையாட வரக்கூடாதா ? என்று உளமுருகி கண்ணீர் வடித்தார். அப்போது, அந்தச் சிலையில் இருந்து சீனிவாசன் வெளிப்பட்டார். பாவாஜி ! என்று அழைத்தார். பாவாஜிக்கு தன் கண்களை நம்பவே முடியவில்லை. ஆக, சாட்சாத் பரப்பிரம்மமான நாராயணன், சீனிவாசனின் வடிவில் அங்கே இருந்தார். வா, பாவாஜி ! சொக்கட்டான் ஆடலாம், என்றார். பாவாஜி அவரது பாதங்களில் விழுந்து ஆசிபெற்று, உன்னைப் பார்த்ததன் மூலம் பிறந்த பயனை அடைந்தேன். வா விளையாடலாம், என்று அவரது கையைப் பிடித்து அமர வைத்தார். இருவரும் விளையாடினர். பக்தன் தோல்வியடைவதை ஆண்டவன் என்றுமே விரும்பமாட்டான். சீனிவாசன், தன் நண்பனுக்காக ஆடத்தெரியாதவர் போல நடித்து, ஆட்டத்தில் கோட்டை விட்டார். பாவாஜி ! நீ இந்த விளையாட்டில் மகா சமர்த்தன். உன் அளவுக்கு என்னால் விளையாட முடியாதப்பா, என்று தன் தோல்வியை ஒப்புக்கொண்ட சீனிவாசனிடம் பாவாஜி, பகவானே ! தாங்கள் தினமும் இந்த ஆஸ்ரமத்துக்கு வர வேண்டும். உங்களோடு நான் சொக்கட்டான் ஆடி மகிழ வேண்டும் என்றார்.
சீனிவாசனும் ஒப்புக்கொண்டு, தினமும் பாவாஜியின் இல்லம் வர ஆரம்பித்தார். இவ்வாறாக நல்ல நண்பர்களாக மாறிவிட்டனர் அவர்கள். பக்தர்களைச் சோதித்துப் பார்ப்பதில் சீனிவாசனுக்கு அலாதிப்ரியம். ஒருநாள், சீனிவாசன் விளையாட வந்தார். தன் கழுத்தில் இருந்த முத்துமாலையைக் கழற்றி அங்கேயே வைத்துவிட்டு சென்று விட்டார். பகவான் மாலையைக் கழற்றி வைத்து விட்டு சென்றுவிட்டாரே, இதைக் கொண்டு போய் கொடுத்து விடலாம் என எண்ணிய பாவாஜி மாலையுடன் திருமலையிலுள்ள சீனிவாசனின் கோயிலுக்குள் சென்றார். அங்கே ஒரே களேபரமாக இருந்தது. ஐயையோ ! சீனிவானின் கழுத்தில் இருந்த மாலையைக் காணவில்லையே ! யார் திருடினார்களோ என்று அர்ச்சகர்கள் குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர். அதிகாரி ஒருவர் கையைப் பிசைந்தபடி நின்றார். அப்போது, பாவாஜி காணாமல் போன மாலையுடன் கோயில் பக்கமாக வர, பிடியுங்கள் அவனை ! அந்த திருடனின் கையில் சுவாமியின் மாலை இருக்கிறது, என்று கத்தினர் அர்ச்சகர்கள். அங்கே நின்றவர்கள் ஓடிச் சென்று பாவாஜியைப் பிடித்து மாலையைக் கைப்பற்றினர். அத்துடன் அவரை நையப் புடைத்தார்கள். பாவாஜி கதறினார். பாலாஜி! சீனிவாசா ! நான் திருடனா ! என் இடத்துக்கு வந்து என்னோடு சொக்கட்டான் ஆடியது இப்படி என்னை சோதிக்கத்தானா ? என் உயிரை எடுத்துக்கொள். ஆனால், பிறர் பொருளைக் கவர்ந்தவன் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாக்கி விடாதே, என்று ஓங்கி குரல் கொடுத்தார். பகவான் இந்த பாமரனோடு சொக்கட்டான் ஆட வந்தாராம்... ஆஹ்ஹ்ஹா... என்று ஏளனச் சிரிப்பு சிரித்தனர் அங்கிருந்தோர். இந்தப் பொய்யனை அரசர் கிருஷ்ணதேவராயரிடம் இழுத்துச் செல்லுங்கள், என்று சிலர் குரல் கொடுக்க அவர்கள் பாவாஜியை இழுத்துச் சென்றனர்.