பதிவு செய்த நாள்
19
செப்
2013
10:09
திருவள்ளூர்:திருவள்ளூர் வீரராகவர் கோவில் குளத்தில், நீர் நிரப்ப, அரசு, ஒரு கோடி ரூபாய் செலவில் நடவடிக்கை எடுக்க உள்ளது. இந்த நிதியில், மூன்றில் ஒரு பங்குத் தொகையான, 33.34 லட்சம் ரூபாயை, கோவில் சார்பாக, ஆந்திர மாநில ஆளுநர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். திருவள்ளூரில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, வீரராகவ பெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, இக்கோவிலில், 80 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட, பெரிய குளம் உள்ளது. இந்த கோவில் குளத்தில், அமாவாசை தினங்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், தங்கள் முன்னோர்களுக்கு, தர்ப்பணம் செய்வது வழக்கம். சமீபகாலமாக, குளத்திற்கு நீர் வரும் கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக, குளம் முழுவதும் நிரம்புவதில்லை. இதையடுத்து, குளத்திற்குள், சிறிய அளவிலான மற்றொரு குளம் அமைத்து, குழாய் மூலம், கோவில் தேவஸ்தான நிர்வகம், தண்ணீர் நிரப்பி வருகிறது. இந்த நிலையில், பெரிய குளத்தில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையேற்று, பூண்டி ஏரியில், மழைக் காலத்தில் வீணாகும் உபரி நீரை, வீரராகவர் கோவிலுக்கு கொண்டு வந்து நிரப்ப, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, மாவட்ட நிர்வாகம், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த பணியில், பங்கேற்பதற்காக, கோவில் தேவஸ்தானம் சார்பில், மொத்த திட்ட தொகையில், மூன்றில் ஒரு பங்கான, 33 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய், ஆட்சியரிடம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான காசோலையை, கோவில் தேவஸ்தானம் சார்பில், ஆந்திர மாநில ஆளுநர், லட்சுமி நரசிம்மன், திருவள்ளூர் ஆட்சியர் வீர ராகவ ராவிடம் வழங்கினார்.