பதிவு செய்த நாள்
19
செப்
2013
10:09
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், நுழைவு வாயிலில் கடைகளின் ஆக்கிரமிப்புகள், அகற்றப்பட்டன. இக்கோயிலுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வருவதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. வடபத்ரசாயி கோயில் ராஜகோபுரம் வழியாக, பக்தர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். கோயில் மாட வீதிகளை சுற்றிய மரங்கள் வெட்டப்பட்டு, கண்காணிப்பு கோபுரங்களும் நிறுவப்பட்டன. ஆடிப்பூர மண்டபத்திலிருந்து ஆண்டாள் கோயிலுக்கு செல்லும் நுழைவு வாயிலில், இரு புறமும், கோயில் நிர்வாகத்தின் சார்பில், கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. வியபாரிகள், கடைகளை 5 அடி நீளத்திற்கு, ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கோயிலை ஆய்வு செய்த பாதுகாப்பு அதிகாரிகள், கோயில் கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற, கோயில் நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தனர். அதன்படி கோயில் நிர்வாகம், கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதைதொடர்ந்து,நேற்று காலையில், கடைகளின் ஆக்கிரமிப்புகளை, உரிமையாளர்களே அகற்றினர். மேலும், ஆண்டாள் கோயில் யானை மண்டபத்தில், ராமநாதபுரம் சர்வோதய சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வந்த, கொலு கண்காட்சியும், வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.