பதிவு செய்த நாள்
20
செப்
2013
03:09
புரட்டாசி சனியன்று ஓம் நாராயணாய நம என்ற எட்டெழுத்து மந்திரத்தைச் சொல்கிறோம்.இதிலுள்ள நம என்ற சொல்லுக்கு உனக்கே நான் உரியவன் என்பது அர்த்தம். ஓம்காரமாக விளங்கும் நாராயணனே உனக்கே நான் உரியவன் என்பது மந்திரத்தின் முழுப்பொருள். அதாவதுஉலகத்தில் வந்து விட்ட பிறகு, என்றோ ஒருநாள் செல்லப்போகிறோம். அவ்வாறு செல்லும் நாளில் நாராயணா! உன்னால் வந்த நாங்கள் உன் இடத்திற்கே திரும்பி வந்து விடுகிறோம் என்று சரணாகதி அடைவதாக அர்த்தம். கலியுகக் கொடுமைகளில் இருந்து தப்பித்து, பூலோகத்தில் சுகமாகவும், நிம்மதியாகவும் வாழ ஓம் நமோ நாராயணாய என்று சொல்வது பொருத்தமானது.
பணமில்லாமல் தங்கம்: கடவுளை விட அவருடைய திருநாமத்திற்கு அரிய சக்தி உண்டு. திரவுபதியின் துன்பத்தைப் போக்கியது கோவிந்தா என்னும் நாமம். முதலையிடம் சிக்கிய கஜேந்திர யானையின் துன்பம் தீர்த்தது ஆதிமூலம் என்ற திருநாமம். கலியுகத்தில், இவ்வாறான நாமஜெபம் மூலமாக கடவுளின் திருவடியை எளிதாக அடைய முடியும். கட்டித்தங்கத்தை சுரங்கத்தில் வெட்டி எடுத்தாலும் அப்படியே பயன்படுவதில்லை. கலைநுட்பம் மிக்க கலைஞரின் கையில் பட்டு ஆபரணமாக மாறினால் தான், அதன் மதிப்பும் மெருகும் கூடுகிறது. ஊரும், பேருமில்லாமல் கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார். அவரே நமக்காக வடிவம் தாங்கி ராமர், கிருஷ்ணர் என்ற திருநாமம் கொண்டு அவதரிக்கிறார். கட்டித்தங்கம் போல கடவுள், ஆபரணத்தங்கம் போல அவரின் திருநாமம் என்று இதனைச் சொல்வதுண்டு. ஆபரணத்தங்கமான கடவுளின் திருநாமத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லி, யாரும் எளிதாகச் சேமிக்கலாம்.
கீழே போயிட்டு வந்தாச்சா: திருப்பதிக்கு போகிறவர்கள் ஆன்லைனிலேயே புக்செய்து, அவசர அவசரமாய் ஏழுமலையான் சந்நிதிக்குள் நுழைந்து தரிசனம் செய்துவிட்டு வந்து விடுகிறார்கள். ஆனால், முதலில் நாம் செல்ல வேண்டியது திருச்சானூரிலுள்ள பத்மாவதி தாயார் கோயிலுக்குத் தான். இதை பெருமாளின் திருக்கரமே நமக்கு எடுத்துக்காட்டுகிறது என்கிறார்கள் மகான்கள். அவரது ஒரு கரம் கீழ்நோக்கி இருக்கிறது. என் முகத்தைப் பார்க்கும் முன் திருவடியைப் பார். திருவடியில் சரணாகதி அடை என்று சொல்வது போல் உள்ளதாக சிலர் இந்தக் கோலத்தைச் சொல்கிறார்கள். இன்னொரு சாராரோ, நீ கீழே இருக்கும் லட்சுமியாகிய பத்மாவதியை பார்த்து விட்டு வந்துவிட்டாயா? அவள் சிபாரிசு செய்தால் தான், என் அருள் உனக்கு கிடைக்கும், என்று சொல்வது போல் உள்ளதாக விளக்கம் சொல்கிறார்கள். பொதுவாக, பெருமாள் கோயில்களில் தாயாருக்கு தான் முதல் வணக்கம். பின்பே பெருமாளைச் சேவிக்க செல்ல வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
அட கலிகாலமே! எப்போது விடை பெறுவாய்?
ராமானுஜரின் சீடர் கூரத்தாழ்வான். இவர் காஞ்சிபுரம் அருகிலுள்ள கூரம் என்ற இடத்தில் வசித்தவர். காஞ்சிபுரம் தேவராஜப்பெருமாள் மீது இவருக்கு பக்தி அதிகம். இரவில், அந்தக் கோயில் சாத்தப்படும் போது டமால் என சத்தம் கேட்கும். அந்த சத்தம் கேட்ட பிறகு தான், கூரத்தாழ்வார் தன் வீட்டுக்கதவைச் சாத்துவார். அதாவது, ஒரு ஊரில் குடியிருப்பவர்கள் அவ்வூர் கோயில் நடை திறந்திருக்கும் வரை, தங்கள் வீட்டுக் கதவுகளையும் திறந்து வைத்திருக்க வேண்டும் என்பது சாஸ்திரம். ஆனால், இப்போது திருட்டு மற்றும் சமூக விரோதச் செயல்களின் காரணமாக, மாலை 6 மணிக்கே கூட கதவைச் சாத்தி விட்டு தான் விளக்கேற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். கலியின் உச்ச ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. புரட்டாசி சனியன்று பெருமாள் கோயிலுக்குச் செல்பவர்கள், சமூக விரோதிகளின் கொட்டத்துக்கு முடிவு கட்டி தர்மத்தை நிலை நிறுத்த வேண்டுமென பெருமாளிடம் வேண்டி வருவோம்.
நாராயணன் நாரதர்: நாராயணன், நாரதர் என்ற பெயர்களில் நாரம் என்ற சொல் இருக்கிறது. நாரம் என்றால் தண்ணீர், தீர்த்தம் என்ற பொருள்கள் உண்டு. பெருமாள் கோயில்களில் தீர்த்தம் கொடுப்பது கூட அவரது பெயர் காரணமாகத்தான். நாரம் என்ற சொல்லுக்கு பிரும்ம ஞானம் என்ற பொருளும் உண்டு. இந்த உலக வாழ்வு நிலையற்றது, என் திருவடியே நிலையானது என்ற தத்துவத்தையும் அவரது பெயர் உணர்த்துகிறது. நாராயணன் என்பதை நாரம்+ அயணன் என பிரிக்கலாம். நாரம் என்றால் தீர்த்தம். அயணன் என்றால் படுக்கை உடை யவன். பாற்கடலாகிய தீர்த்தத்தில் பாம்பணையில் படுத்திருப்பவன் என்பதே நாராயணன் என்ற சொல்லுக்குப் பொருள். நாராயணனின் நாமத்தை அதிகமாக உச்சரிப்பவர் நாரதர். நாராயண நாராயண என்று உச்சரித்தபடியே தான் அவர் சகல லோகங்களுக்கும் செல்வார். இவர் தோன்றுவதற்கு முன், இந்த உலகில் தண்ணீர் என்பதே குறைவாக இருந்ததாம். அவரது பிறப்புக்கு பின்தான் தண்ணீர் அதிகரித்தது. இதன் காரணமாக அவர் நாரதர் என்ற பெயர் பெற்றார் என்பர்.
8+12+6=26: ஒன்றாம் வகுப்பு குழந்தைக்குரியது போல இருக்கிறதே இந்தக் கணக்கு என்று நீங்கள் நினைத்தால் அது தப்புக்கணக்கு! இது பாற்கடலில் பள்ளிகொள்ளும் பரந்தாமனுக்குரிய பெரிய கணக்கு. விஷ்ணு காயத்ரியில் நாராயண மந்திரம், வாசுதேவ மந்திரம், விஷ்ணு மந்திரம் ஆகிய மூன்று மந்திரங்கள் உள்ளன. இதில் நாராயண மந்திரம் என்பது ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து மந்திரம் (ஓம் என்பது ஒரே எழுத்து). வாசுதேவ மந்திரத்தில் 12 எழுத்துக்கள் உள்ளன. ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்பது அந்த மந்திரம். விஷ்ணு மந்திரம் என்பது ஓம் விஷ்ணவே நம என்ற ஆறெழுத்து உடையது. ஆக, இவற்றின் கூட்டுத்தொகை 26. விஷ்ணு காயத்ரியில் இவை எல்லாம் சேர்த்து 26 எழுத்துக்கள் உள்ளன.
நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் என்பது இந்த மந்திரம். (சமஸ்கிருதத்தில் எழுத்துக்களை தனித்தனியாக எண்ணக்கூடாது. சில சேர்ந்து வரும்). இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. புரட்டாசி சனியன்று இந்த எளிய மந்திரங்களை மனச்சுத்தத்துடன் சொன்னால் பெருமாளின் பூரண அருள் கிடைக்கும்.
ஏழுமலையான் மீது 32000 கீர்த்தனை பாடியவர்: ராமானுஜர் திருமலையின் புனிதம் கருதி காலால் நடக்க விரும்பாமல் தவழ்ந்தே மலையேறினார். வழியில் அவருடைய முழங்கால் முறிந்தது. அந்த இடமே முழங்கால் முறிச்சான் என்று அழைக்கப்படுகிறது. இதனை மோக்காலு மிட்டா என்று சொல்வர். இந்த இடத்தில் ராமானுஜர் கோயில் உள்ளது. மோக்காலு மிட்டாவைக் கடந்தால் ஏழுமலையில் ஒன்றான சேஷாத்ரியின் சிகரத்தை அடையலாம். சிறுவனாக இருந்தபோது, அன்னமய்யா என்னும் பக்தர் மலையேறி வந்த களைப்பில் மோக்காலுமிட்டாவில் மயங்கி விழுந்தார். அவரின் பசிதாகம் போக்க பத்மாவதி தாயாரே, பாமரப் பெண்ணாக வந்து மயக்கம் தெளிய நீரும், உணவும் கொடுத்ததாகச் சொல்வர். இவர் திருப்பதி ஏழுமலையான் மீது 32,000 கீர்த்தனைகளைப் பாடியிருக்கிறார்.
ஹில் வியூ தரிசனம்: திருப்பதியை அடுத்துள்ள சந்திரகிரியில் இருந்து ஒரு நடைபாதை திருமலைக்குச் செல்கிறது. திருவிழாக்காலங்களில் யானைகள் இந்த வழியாகச் செல்லும். இப்பாதை வழியாக திருமலையில் ஏறியவுடன், இடது புறத்தில் ஹில் வியூ செல்லும் பாதை மலை முகட்டிற்குச் செல்கிறது. அங்கிருந்து பார்த்தால் திருமலையின் அழகுகாட்சி நம் கண்முன் தெரியும்.
மனைவியைப் பிரிந்தவர்களே! முதலில் இதைப் படியுங்க!
திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்ஸவம் மற்றும் இதர விழா நாட்களில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஏழுமலையான் எழுந்தருளுவார். அவரை மலையப்பன் என்று அழைப்பர். துணைவியருடன் பவனி வரும் அவர்ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது தான் இல்லறம். மனைவியைப் பிரிந்து விட்டால் ஒருவனுக்கு மதிப்பு இல்லை என்று பக்தர்களுக்கு ஒரு செய்தி சொல்கிறார். திருமால் மீது சில காரணங்களால் வருத்தம் கொண்ட லட்சுமி, பூலோகம் வந்தாள். ஆகாசராஜனின் என்பவனின் மகளாகப் பிறந்தாள். பத்மாவதி என்ற பெயர் கொண்டாள். லட்சுமியை பிரிந்ததால் திருமால் செல்வமெல்லாம் இழந்தார். அவளைத் தேடி சீனிவாசன் என்ற பெயருடன் பூலோகம் வந்தார். மிகுந்த சிரமத்தின் பேரில் பத்மாவதியை மணந்தார், அதன்பின் அவருக்கு எல்லா வளங்களும் வந்து சேர்ந்தன. மனைவியால் தான், ஒரு கணவனுக்கு மதிப்பு என்பதை இந்த சம்பவத்தின் மூலம் உலகுக்கு உணர்த்தினார்.
குளத்தில் தயாரான கல்யாண சமையல் சாதம்: பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருமலையில் 64 புண்ணியதீர்த்தங்கள் உள்ளன. இந்த தீர்த்தப்பகுதிகளில் தான் சீனிவாச பத்மாவதி கல்யாணத்தில் பங்கேற்ற விருந்தினருக்குத் தேவையான உணவு வகைகள் தயாரானதாக திருமலை வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. ஏழுமலையான் கோயில் அருகில்உள்ள சுவாமி புஷ்கரணி தீர்த்தத்தில் சோறும், பாபவிநாசத்தில் சாம்பாரும், ஆகாசகங்கையில் பாயாசமும், தும்புரு தீர்த்தங்களில் சித்ரா அன்னங்களும், குமார தீர்த்தத்தில் அவியல், பொரியல் வகைகளும் தயாராயின. இவை தவிர, கபில, பாண்டவ, பல்குண, சக்கர, பத்மஸரோவம் தீர்த்தங்களிலும் பல்வகை உணவுகள் தயார் செய்யப்பட்டதாக தல வரலாறு சொல்கிறது.
பிள்ளைக்காக ஒருவேளை மட்டுமே சாப்பிடும் அம்மா!
திருப்பதி சீனிவாசனை வளர்த்தவள் வகுளாதேவி. இவள், முற்பிறவியில் யசோதையாக இருந்து கண்ணனை வளர்க்கும் பாக்கியம் பெற்றவள். துவாபரயுகத்தில் அஷ்டமகிஷிகள் என்னும் எட்டுப்பெண்களைக் கண்ணன் திருமணம் செய்தார். ஆனால், யசோதைக்கு ஒரு திருமணத்தையும் காணும் பேறு பெறவில்லை. அக்குறையைப் போக்க கலியுகத்தில் வகுளாதேவியாகப் பிறந்தாள் யசோதை. திருப்பதியில் நடந்த சீனிவாசக் கல்யாணத்தை கண்டுகளித்தாள். வகுளாதேவி சந்நிதி, திருப்பதி கோயில் மடப்பள்ளியில் உள்ளது. இவளுக்கு மடப்பள்ளி நாச்சியார் என்ற பெயரும் உண்டு. இவளது மேற்பார்வையில் ஏழுமலையானுக்கு உணவு தயாராவதாக ஐதீகம். உணவை முடித்து மகன் ஓய்வுக்குச் சென்ற பின், இரவில் மட்டும் இவளுக்கு நைவேத்யம் நடக்கும். பிள்ளை சாப்பிடுவதற்காக, சமையல் பணியை சாப்பிடாமல் கூட மேற்பார்வை செய்வதாக ஐதீகம்.
ஸ்ரீபாத மண்டபம்: திருமலைநம்பி, ஏழுமலையானுக்கு தினமும் அடிவாரத்தில் இருந்து தீர்த்த நீரை எடுத்துச் செல்வது வழக்கம். ஒருநாள், அடிவாரம் வந்த அவர் ராமானுஜருடன், ராமாயணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். நேரம் போனதே தெரியவில்லை. நண்பகல் வந்துவிட்டது. திருமலைநம்பி வருத்தத்துடன், உச்சிக்காலம் வந்துவிட்டதே! பெருமாளுக்கு அபிஷேக தீர்த்தம் கொண்டு செல்லாமல் அபச்சாரம் செய்து விட்டேனே!, என்று கண் கலங்கினார். அவரைக் காக்க, பெருமாளே இறங்கி வந்து பூஜையை ஏற்றுக் கொண்டார். பெருமாள் அங்கு நின்றதன் அடிப்படையில், அவரது பாதங்கள் வடிக்கப்பட்டுள்ளன. திருப்பதி மலையடிவாரமான அலிபிரியில் இருந்து மலையேறிச் செல்லும் நடைபாதையில், இந்த பாதமண்டபம் உள்ளது.
ஏழுமலையானுக்கு 200 பாட்டு: கலியுகம் தோன்றிய நாள் முதல், பக்தர்களைக் காப்பதற்காக திருமலையில் வெங்கடேசப்பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். இதனால் இவருக்கு கலியுகவரதன் என்ற திருநாமம் உண்டு. ரிக் வேதத்தின் எட்டாவது அத்யாயத்தில் வேங்கடேசர் பற்றியும், பழந்தமிழ் இலக்கணமான தொல்காப்பியம், காப்பிய நூலான சிலப்பதிகாரம் போன்றவற்றிலும் வேங்கடமலை பற்றிய குறிப்புகள் உள்ளன. பன்னிருஆழ்வார்களில் பத்துபேர் திருப்பதி வெங்கடேசரை பாடியுள்ளனர். அவரைப்பற்றி இருநூறு பாசுரங்கள் உள்ளன.