பதிவு செய்த நாள்
20
செப்
2013
03:09
கன்யா மாதம் என்று சொல்லப்படும் புரட்டாசி மாதம் முழுவதும் விரதமிருந்து பெருமாளை வழிபட சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். கன்யா (புரட்டாசி) மாதத்தில்தான் சனி பகவான் பிறந்தார். எனவே, புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது பெருமாளுக்கு மகிழ்ச்சியைத் தரும், சனியின் பார்வையும் பலவீனமடையும். அன்று முழுவதும் உபவாசம் இருப்பது சிறப்பாகப் பேசப்படுகிறது. கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனியின் பிடியிலிருந்து காப்பாற்றுவார். இதற்குப் புராணத்தில் ஒரு கதை உண்டு.
ஒரு சமயம் சனி பகவான் ஆஞ்சநேயரைப் பிடிக்க அவரிடம் அனுமதி கேட்டார். சனியின் நச்சரிப்புத் தாங்காமல் ஆஞ்சநேயர், என் தலைமீது அமர்ந்து கொள் என்று சொன்னதும், ஆஞ்சநேயர் தலையில், சனி அமர்ந்தார். இதுதான் சமயம் என்று அங்கிருந்த பெரிய பாறாங்கல்லை தன் வாலில் எடுத்துத் தன் தலை மீது அமர்ந்திருக்கும் சனியின் தலைமீது வைத்தார். பாறாங்கல்லின் பாரம் தாங்காமல் மூச்சு வாங்கிய சனி, தன்னை விடுவிக்கும்படி ஆஞ்சநேயரிடம் மன்றாடவே, என்னையும் என்னை வணங்கும் பக்தர்களுக்கும் இனி தொந்தரவு கொடுக்க மாட்டேன் என்று வாக்குறுதி கொடு என்று சொல்லவே, ஆஞ்சநேயரின் கட்டளைக்கு அடிபணிந்தார் சனி. அன்றிலிருந்து ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை. புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. ஆனால் தர்மம் நிறையச் செய்யலாம். காகத்திற்கு அன்று ஆலை இலையில் எள்ளும் வெல்லமும் கலந்த அன்னம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும்.
புரட்டாசி சனிக்கிழமையன்று சிவாலயங்களுக்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வணங்கினால், சனி தோஷம் நீங்கும். புனிதமிக்க புரட்டாசி மாதத்தில் வரும் விரதங்கள் புண்ணிய பலன் அதிகம் தரும் என்பது ஐதீகம். ஜேஷ்டா விரதம், மகாலெட்சுமி விரதம், தசாவதார விரதம், கதளி கவுரிவிரதம், அநந்த விரதம், பிரதமை, நவராத்திரி பிரதமை, ஷஷ்டி, லலிதா விரதம் போன்றவை விசேஷமானவை.