பதிவு செய்த நாள்
21
செப்
2013
10:09
புதுச்சேரி:ஏனாமில், விநாயகருக்கு படையிலிடப்பட்ட லட்டுகள் ஏலம் விடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா, ஏனாமில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 50க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, தினசரி பூஜைகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வந்தன.மேலும், விதவிதமான லட்டுகள் தயார் செய்து, விநாயகருக்கு படையலிடப்பட்டது. பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், கோதாவரி ஆற்றில் செப் 19 மற்றும் செப் 20 விஜர்சனம் செய்யப்பட்டன.விநாயகருக்கு வைத்து பூஜிக்கப்பட்ட லட்டுகளை ஏலம் விட்டு, ஏலத்தில் கிடைக்கும் தொகையை, அன்னதானம் செய்வதற்கு பயன்படுத்துவது ஆந்திர மக்களின் வழக்கமாகும். நல்ல காரியத்துக்கு பயன்படுத்தப்படுவதாலும், அதிக தொகைக்கு லட்டை ஏலம் எடுப்பது சமுதாயத்தில் அந்தஸ்தான விஷயம் என்பதாலும், சாதாரண மக்களில் ஆரம்பித்து, பிரமுகர்கள்வரை ஏலத்தில் உற்சாகமாக பங்கேற்பர். சிறிய லட்டாக இருந்தாலும் போட்டி போட்டுக் கொண்டு ஏலம் கேட்பர். விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு முன்னதாக, பாரம்பரிய வழக்கப்படி, ஏனாமில் பல்வேறு இடங்களில் லட்டு ஏலம் நடந்தது. கனகலபேட்டாவில் நடந்த ஏலத்தில், 60 கிலோ எடையுள்ள லட்டு, 57 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.