ஊத்துக்கோட்டை: புரட்டாசி மாதத்தை ஒட்டி நடைபெற்ற ஊஞ்சல் சேவையில் ஸ்ரீவரதராஜ பெருமாள் தம்பதியினர் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பிராமணத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில். பழமை வாய்ந்த இக்கோவில் சிதிலமடைந்து காணப்பட்ட நிலையில், சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிகளவில் பக்தர்கள் இங்கு வந்து சுவாமியை தரிசனம் செய்கின்றனர். புரட்டாசி மாதத்தை ஒட்டி, இக்கோவிலில் ஊஞ்சல் சேவை நடந்தது. முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இரவு உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஊஞ்சலில் அமர்ந்து தம்பதி சமேதராய் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடி சுவாமியை வழிபட்டனர். பின்னர் உற்சவர் கோவிலை சுற்றி மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேரந்தவர் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.