பதிவு செய்த நாள்
01
அக்
2013
10:10
மயிலாடுதுறை: மயிலாடுதுறைக்கு வந்த பாசஞ்சர் ரயிலில், அனாதையாகக் கிடந்த கருங்கல் சுவாமி சிலைகளை, போலீசார் கைப்பற்றினர். நாகை மாவட்டம், மயிலாடுதுறை ஜங்ஷனுக்கு, நேற்று முன்தினம் இரவு, நெல்லை பாசஞ்சர் ரயில் வந்தது. ரயில் பெட்டிகளை, ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். ஒரு சாக்கு மூட்டையில், கருங்கல்லால் ஆன, ஒன்றரை அடி உயரமுள்ள சனீஸ்வர பகவான், விஷ்ணு துர்கை அம்மன் சிலைகள் இருந்தன. துர்கை சிலையின் ஒரு கையில் சங்கும், மற்றொரு கையில் சக்கரமும், மற்ற இரு கைகளில் அபய முத்திரையும் இருந்தன. வலது கையில் மஞ்சள் வைத்து காப்பு கட்டப்பட்டிருந்தது. இந்த சிலைகள் எந்த ஊரில் இருந்து கடத்தி வரப்பட்டன, கடத்தியவர்கள் யார்? என்பது குறித்து, ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட சுவாமி சிலைகளை, மயிலாடுதுறை தாசில்தார் கலைச்செல்வியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.