சபரிமலை மண்டல மகரவிளக்கு: 17-ல் தேவசம் அமைச்சர்கள் ஆலோசனை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03அக் 2013 10:10
நாகர்கோவில்: சபரிமலையில் அடுத்த மாதம் தொடங்க உள்ள மண்டல மகரவிளக்கு சீசனில் வெளி மாநில பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் தொடர்பாக ஆலோசிக்க தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநில தேவசம்போர்டு அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 17-ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. கேரள தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார் தக்கலையில் நிருபர்களிடம் கூறியதாவது: சபரிமலையில் இரண்டு கோடி ரூபாய் செலவில் இரண்டு அன்னதான மண்டபங்கள் நன்கொடையாளர்கள் மூலம் கட்டப்பட்டு வருகிறது. மரக்கூட்டத்தில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க சுரங்கப்பாதை அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு சீரமைக்கப்பட்ட சுவாமி ஐயப்பன் ரோடு, தார் போடப்பட்டு விளக்குகள் பொருத்தப்படும். சபரிமலை செல்லும் ரோடுகள் அனைத்தையும் சீரமைக்க 153 கோடி ரூபாய் அரசு ஒதுக்கியுள்ளது. பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு தனி குடிநீர் குழாய் பொருத்தப்பட்டு வருகிறது. இதனை வரும் 24-ம் தேதி முதல்வர் உம்மன்சாண்டி திறந்து வைக்கிறார். அன்றைய தினம் பம்பையில் அனைத்துத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெறும். இந்த ஆண்டு நிலக்கல்லில் எட்டாயிரம் வாகனங்கள் பார்க்கிங் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சன்னிதானம் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் 22 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. சபரிமலை மாஸ்டர் பிளானை செயல்படுத்த வசதியாக அரசு 25 கோடி ரூபாய் அனுமதித்துள்ளது. அரசு நேரடியாக சபரிமலைக்கு நிதிஒதுக்குவது இது முதல் முறையாகும். சன்னிதானத்தில் பல்நோக்கு சிறப்பு ஆஸ்பத்திரி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் இரண்டு தளங்கள் வரும் சீசனுக்கு முன்னர் தீர்க்கப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக போலீஸ் துறை மூலம் செயல்படுத்தப்பட்ட ஆன்லைன் முன்பதிவு இந்த ஆண்டு மேலும் விரிவு படுத்தப்படும். வரும் 17-ம் தேதி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி மாநில தேவசம்போர்டு அமைச்சர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. நிலக்கல்லில் இம்மாநிலங்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்படுகிறது. இதில், கர்நாடகா இடத்தை பெற்று கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளது. இம்மாநில அரசு சார்பில் இங்கு ஆயிரம் கழிவறைகள் கட்டப்படுகிறது. புகார்களில் சிக்கி தற்போது கோர்ட்டில் விடுதலையாக்கப்பட்டுள்ள கண்டரரு மோகனரருவுக்கு மீண்டும் தந்திரி பதவி கொடுப்பது பற்றி தேவசம்போர்டு முடிவு செய்யும். இதில் அரசு எந்த பரிந்துரையும் வழங்குவதற்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.