Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தடாதகையாரின் திருமணப் படலம்! திருநகரங்கண்ட படலம்! திருநகரங்கண்ட படலம்!
முதல் பக்கம் » 64 திருவிளையாடல்
தடாதகைபிராட்டியாரின் திருஅவதாரப் படலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 மார்
2011
12:03

குலசேகர பாண்டியன் மதுரை நகரை நிர்மாணித்ததன் பலனாக அழகான மகனையும் பெற்றான். அவனுக்கு மலையத்துவஜன் என்று பெயரிட்டான் குலசேகர  பாண்டியன். அந்த மன்னனின் மகளாக தன் மனைவி பார்வதிதேவியையே அவதரிக்கச் செய்தார் சிவபெருமான். ஆம்... அவளே தடாதகை பிராட்டி எனப்படும் மீனாட்சி. அவள் மலையத்துவஜனின் மகளாகப் பிறந்தது சுவை மிக்க வரலாறு. மலையத்துவஜனின் மனைவி காஞ்சனமாலை. இவள் இவ்வுலகில் தோன்றிய உயிர்களில் வித்தியாசமானவள். மனித நிலையில் இருக்கும் நம்மை, நாளையே கடவுள் அழைத்து, இன்று முதல் நீ தேவலோகத்தில் தேவனாக இருப்பாய், என்று சொன்னால், நாம் அடையும் ஆனந்தத்துக்கு அளவே இருக்காது. மனித நிலையில் தேவநிலைக்கு உயர்வதையே உயிர்கள் விரும்பும். ஆனால், காஞ்சனமாலை இதற்கு நேர் எதிரானவள். அவள் தனது முந்தையப் பிறவியில் மனித குலத்தை விட உயர்ந்த கந்தர்வ குலத்தில் பிறந்தாள். அந்தப் பிறவியில் இருந்து, தன்னை மனித குலத்திற்கு தாழ்த்திக் கொண்டாள். அப்போது அவளது பெயர் வித்யாவதி. இவளது தந்தை விசுவாவசு. இவளுக்கு அம்பிகையின் மீது பிரியம் அதிகம்.

தந்தையே! அம்பிகையை நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற வேண்டும், தாங்கள் தான் அதற்கு உதவ வேண்டும், என்றாள். விசுவாவசு அவளுக்கு சக்தி மந்திரத்தை உபதேசித்து, அதையே தொடர்ந்து பக்தியுடன் சொல்லி அம்பாளைக் காணும் பாக்கியத்தை  பெறலாம் என்றார். அடுத்து அம்பாளைத் தரிசிக்க உகந்த இடம் எது எனக் கேட்டாள் வித்யாவதி. பூலோகத்தில் துவாதசாந்தம் என்று புகழ் பெற்றதும், கடம்பமரங்கள் நிறைந்த வனத்திலுள்ளதுமான மதுரை என்னும் புண்ணிய ÷க்ஷத்ரத்தில், யார் ஒருவர் அம்பாளைத் தரிசிக்கிறார்களோ, அவர்கள் பாக்கியசாலிகள்,என்றார் விசுவாவசு. தந்தையிடம் அனுமதி பெற்று கந்தர்வக்கன்னியான வித்யாவதி பூலோகம் வந்தாள். மதுரை ÷க்ஷத்ரத்தில் குழந்தை வடிவில் அருள்பாலித்த சக்திதேவியை வணங்கி வந்தாள். தந்தை உபதேசித்த மந்திரத்தை இடைவிடாது சொன்னாள். ஒரு ஆண்டு வரை கடுமையான விரதம் அனுஷ்டித்த அவளது பக்திக்கு அம்பாள் இரங்கினாள். வித்யாவதியின் முன்பு மூன்று வயது குழந்தையின் வடிவில் காட்சி தந்தாள். தாயே என அழைத்தாள். வித்யாவதி நெகிழ்ந்து போனாள்.

அம்மா மீனாட்சி! நான் உன்னை குழந்தையாகக் கருதி என் மனதால் பாராட்டினேன், சீராட்டினேன், நீராட்டினேன், அழுது அடம்பிடித்த உன்னை பொய்க்கோபம் கொண்டு கண்டித்தேன், பாலூட்டினேன், ஜடை முடிந்து பின்னலிட்டேன். இத்தனையும் கற்பனை தான் என்றாலும், இந்த எளிய பக்திக்கும் அகமகிழ்ந்து காட்சி தந்தாயே! பிறந்த பயனை அடைந்தேன், என்றாள் வித்யாவதி. குழந்தை மீனாட்சி சிரித்தாள். தாயே! பக்தர்கள் எனக்கு கொண்டு வரும் ஆடம்பர காணிக்கைகளால் நான் மகிழ்வதில்லை. கால் கடுக்க காத்திருப்பதால் மட்டும் என்னை அடைந்து விட முடியாது. இருந்த இடத்தில் இருந்தபடியே, உன்னைப் போல் மானசீகமான பக்தியை செலுத்துவதையே நான் விரும்புகிறேன். அவர் களுக்கு காட்சி கொடுப் பதையே பெருமையாகக் கருதுகிறேன். சரி...நீ ஏதாவது என்னிடம் கேள். வரம் தருகிறேன், என்றாள். தெரிந்தோ தெரியாமலோ உன்னை என் பிள்ளையாகக் கருதிவிட்டேன். அந்தப் பிணைப்பை என்னால் விட முடியாது. இந்த நிலை தொடர வேண்டும். இதைத் தவிர என்னிடம் எந்தப் பிரார்த்தனையும் இல்லை, என்றாள் வித்யா. இதுகேட்டு அகம் மகிழ்ந்த மீனாட்சி, அம்மா! அடுத்த முறை நீ மானிட ஜென்மம் எடுப்பாய். சோழராஜனின் மகளாகப் பிறக்கும் உன்னை, மலையத்துவஜ பாண்டியன் திருமணம் செய்வார்.

உங்கள் இல்லத்தில் நான், இதே மூன்று வயதுக் குழந்தையாய் அவதரிப்பேன், என்று சொல்லி வித்யாவதிக்கு நல்லாசி கூறி மறைந்தாள். வித்யாவதி நினைத்திருந்தால், கந்தர்வ நிலையில் இருந்து தேவநிலைக்கு உயர்ந்து சக்திலோகத்திலேயே இருந்திருக்கும்படியான வரம் கேட்டிருக்க முடியும். ஆனால், அவள் மானிடப்பிறவி பெற்றதன் மூலம், தெய்வத்திற்கே தாயான பெருமையைப் பெற்றாள். ஈசனுக்கு மாமியாராகும் தகுதியும் கிடைத்தது. மீனாட்சியின் அருள்வாக்கின் படி, அவள் சோழமன்னன் சூரசேனனின் மகளாகப் பிறந்தாள். மலையத்துவஜ பாண்டியனை மணம் செய்தாள். நீண்ட காலமாயிற்று. அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. தனக்குப் பிறகு நாடாள வாரிசு இல்லையே என்ற கவலை மன்னனை உருக்கியது. அவன் பல யாகங்கள் செய்தான். கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய் வித்தான். கடைசியாக, அஸ்வமேதயாகம் செய்வதென முடிவு செய்தான். இதன்மூலம் சகல லோகங்களும் தனக்கு அடிமை படுவதுடன், குழந்தை பாக்கியமும் சித்திக்கும் எனக் கருதினான். யாக ஏற்பாடுகள் ஜரூராக நடந்தது. வெற்றிகரமாக யாகம் நடந்து விடும் என்ற நிலை வந்ததும், தேவ லோகத்தில் இருந்த இந்திரனுக்கு பயம் வந்து விட்டது. யாகம் வெற்றி பெற்றால், மலையத்துவஜன் இந்திரலோகத்தையே கைப்பற்றி விடுவான். தன் பதவி போய்விடுமே என்று கவலையடைந்தான். ஒருநாள், மலையத்துவஜனின் முன்பு தோன்றினான்.

ஆச்சரியமடைந்த மலையத் துவஜன், ஐயனே! தாங்களே எங்கள் மதுரை நகருக்கு நேரில் வந்தீர்களா! நான் என்ன பாக்கியம் செய்தேன், என்று உபசார வார்த்தைகள் சொல்லி வரவேற்றான். இந்திரன் அவனிடம், மாமன்னனே! குழந்தை வேண்டும் என்பதே உனது கோரிக்கை. அதற்கு அஸ்வமேதயாகம் பலன் தராது. நீ பல யாகங்கள் செய்தாலும் புத்திரகாமேஷ்டி யாகம் செய்யத் தவறிவிட்டாய். அந்த யாகத்தை நடத்து. உனக்கு பராசக்தியே மகளாக அவதரிக்க காத்திருக்கிறாள். முற்பிறப்பில், உன் மனைவி செய்த புண்ணியத்தால் கிடைத்துள்ள பாக்கியம் இது, என்று சொல்லவும், அஸ்வமேத யாக திட்டத்தைக் கைவிட்டு, புத்திரகாமேஷ்டி யாகம் செய்வதற்கு ஒப்புக் கொண்டான் மன்னன். இந்திரனும் பயம் நீங்கி விடை பெற்றான். புத்திர காமேஷ்டி யாகம் தொடங்கியது. இந்த தகவல் பட்டமகிஷி காஞ்சனமாலைக்கும் தெரியவரவே, அவளும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. கண்டோர் வியக்கும் வேள்விச்சாலை ஒன்றை அமைத்தான் மலையத்துவஜன். யாகம் கோலாகலமாகத் துவங்கியது. நாட்டுமக்கள் தங்கள் வாரிசை எதிர்பார்த்து ஆவலுடன் யாக பூஜையில் கலந்து கொண்டனர். மலையத்துவஜனும், காஞ்சனமாலையும் புனிதநீராடி, வேப்பிலை மாலை சூடி யாக குண்டத்தின் முன் அமர்ந்தனர். யாக குண்டத்தில் பல்வகை பொருட்கள் போடப் பட்டன. குடம் குடமாக நெய் ஊற்றப்பட்டது. வேள்விப்புகை மதுரை நகரெங்கும் பரவியது. இந்திரன் அந்த யாகத்தின் பலனைப் பெற்றுக் கொண்டு, அதற்கேற்ப பலனும் அளித்தான். அப்போது யாகசாலையில் பூமழை பொழிந்தது. மன்னனுக்கு வலது தோளும் வலது கண்ணும் துடித்தன.

ஆண்களுக்கு வலது கண், வலது தோள் துடித்தால் சுபமான நிகழ்ச்சிகள் ஏற்படும். பெண்களுக்கு இடது கண் துடித்தால் அது சுபசகுனம். அதற்கேற்ப, காஞ்சனமாலைக்கு இடது கண் துடித்தது. அப்போது அந்த இடமே பிரகாசமானது. யாக குண்டத்தில் எரிந்த அக்னியின் மத்தியில், பளிச்சென வெளிச்சம் உண்டானது. அதன் மத்தியில் பச்சை நிறத்தில் மூன்று வயதுடைய ஒரு பெண் குழந்தை, நின்ற நிலையில் தோன்றியது. ஆம்... தெய்வத்தாயான மீனாட்சி பூமியில் அவதரித்து விட்டாள். காஞ்சனமாலை என்னும் பெண் தெய்வம் மதுரை மக்களுக்கு கொடுத்த மற்றொரு தெய்வம் அவள். மதுரைக்கு போகிறவர்கள் மீனாட்சியை மட்டும் வணங்கினால் போதாது. அவள் இந்த பூமியில் அவதரிக்க காரணமான காஞ்சனமாலையையும் வணங்கி வர வேண்டும். கோயில் கிழக்குவாசல் எதிரேயுள்ள புதுமண்டபத்தைக் கடந்தால் வரும் எழுகடல் தெருவில் இந்த அம்மைக்கு தனிக் கோயில் இருக்கிறது. அந்தக் குழந்தையைக் கண்டு அகமகிழ்ந்தாள் காஞ்சனா. அவளது மார்பில் தன்னையறியாமல் பால் சுரந்தது. அனலில் உதித்த அந்தச் சிறுமியின் கண்கள் கயல் என்னும் மீனுக்கு சமமாக நீண்டு பெரிதாக மிக அழகாக இருந்தது. என் அம்மையே, அங்கயற்கண்ணியே என அவள் அழைத்தாள். அம்+கயல்+கண்ணி என்பதே அங்கயற் கண்ணி ஆனது. அம் என்றால் அழகிய, கயல் என்றால் மீன். கண்ணி என்றால் கண்களையுயைடவள். அங்கயற்கண்ணி என்றால் அழகிய கண்களை உடையவள் என்று பொருள். இன்னொரு பொருளும் இதற்கு உண்டு. மீனுக்கு தனது பார்வையாலேயே குஞ்சுகளுக்கு இரையூட்டும் சக்தியுண்டு. அது தனது கண்களை இமைப்பதே இல்லை. நாமே கூட பார்க்கலாம். மீனை தண்ணீரை விட்டு வெளியே தூக்கிப் போட்டு அது இறந்துவிட்டாலும் சரி தான். அதன் கண்கள் மட்டும் திறந்தே இருக்கும். ஆக, ஒரு கணம் கூட இமைக்காமல் மக்களை பாதுகாப்பவள் என்ற பொருளும் இதற்குண்டு. அதனால் தான் மீனின் ஆட்சி மதுரையில் நடக்கிறது. அன்னையையும் மீனாட்சி என்கிறோம்.

மலையத்துவஜன் மகளை வாரியணைத்தான். அதன் பட்டுக்கன்னங்களில் முத்தமழை பொழிந்தான். பட்டுத்துணி ஒன்றை குழந்தை மீது போர்த்தி மார்பில் சுரந்த பாலை தன் மழலைக்கு ஊட்டி பேரின்பம் கண்டாள் காஞ்சனமாலை. பாலூட்டி முடித்ததும், தன் குழந்தையின் முக அழகைப் பார்த்து பூரித்துப் போன காஞ்சனையின் கண்கள் சற்றே கீழிறங்க, அப்படியே அதிர்ச்சியில் ஆழ்ந்து விட்டாள். என்ன இது! உலகில் யாருக்குமே இல்லாத அதிசயம். ஐயோ! குழந்தைக்கு இரண்டு மார்புகள் தானே இருக்க வேண்டும், மூன்றாவதாக ஒரு தனம் இருக்கிறதே. இதென்ன கொடுமை. ஐயோ பராசக்தி! நீயே என் மகளாகப் பிறந்தாய். உன்னைப் பெற்றுமா நான் துன்பத்தில் ஆழ வேண்டும்! சற்றுமுன் வரை இருந்த இன்பம் ஒரே நொடியில் தூளாகி விட்டதே, காஞ்சனா புலம்ப, மலையத்துவஜன் பதட்டத்துடன் என்ன ஏதென்று விசாரித்தான். விஷயத்தை அறிந்ததும் அவனது முகமும் சோகத்தில் ஆழ்ந்தது. ஆனாலும், அவர்கள் இதை வெளிப்படுத்த வில்லை. குழந்தையை எடுத்துக்கொண்டு சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சென்றனர். சன்னதியில் குழந்தையை கிடத்தி, ஐயனே, மழலைச்செல்வம் இல்லாத எங்களுக்கு குழந்தை தந்தாய். ஆனால், பிறந்த குழந்தை இப்படியிருக்கிறதே! இதனால், அவளது எதிர்காலமே பாதிக்குமே! என்ன செய்வேன்! என உருக்கமாக சுவாமியிடம் பேசினான் மலையத்துவஜன். அப்போது அசரீரி ஒன்று அவர்களுக்கு மட்டுமே கேட்கும் வகையில் ஒலித்தது.

மலையத்துவஜா, காஞ்சனா! நீங்கள் இருவரும் இதுபற்றி கவலை கொள்ள வேண்டாம். இவள் அன்னை பராசக்தியின் அவதாரம். இவள் பருவம் எய்தி, திருமணம் நடக்க இருக்கும் வேளையில், இந்த தனம் மறைந்து விடும். எனவே இதுபற்றி நீ கவலை கொள்ள வேண்டாம். இவளுக்கு தடாதகை என்று பெயரிடுங்கள், என்றது. இறைவனே உத்தரவாதம் கொடுத்தபிறகு என்ன பயம். தம்பதியர் பயம் நீங்கி சுவாமிக்கு நன்றி தெரிவித்தனர். குழந்தை பிறந்த விழா பாண்டியநாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மதுரை நகரம் விழாக்கோலம் பூண்டது. மன்னன் தன் மக்களுக்கு தானதர்மம் செய்தான். காஞ்சனமாலை சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், பட்டுப்புடவைகளை தானமாக அளித்தாள். நீண்டதூரம் வரிசையில் நின்ற மக்கள் இந்த தானத்தைப் பெற்று மகிழ்ந்தனர். மன்னர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் வேளையில் மக்களுக்கு தாராளமாக சலுகைகள் கிடைக்கும். மலையத்துவஜனின் ஆட்சியில் வரிகள் குறைக்கப்பட்டன. கைதிகள் விடுதலை செய்யப் பட்டனர். புலவர்கள் கவுரவிக்க பட்டனர். பல இடங்களில் மக்களின் தாகம் தீர்க்கவும், விவசாயத்தை அதிகரிக்கவும் குளங்கள் வெட்டப்பட்டன. மீனாட்சி பிறந்தவுடனேயே பாண்டியநாட்டு மக்கள் மிகுந்த மகிழ்வுடன் வாழ ஆரம்பித்து விட்டனர். மன்னன் பெயர் சூட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்தான். இறைவனின் உத்தரவுப்படி தடாதகை பிராட்டியார் என்று பெயர் சூட்டினர். தடாதகை என்றால் என்ன? அவள் ஏன் மூன்று தனங்களுடன் இந்த பூமியில் பிறந்திருக்க வேண்டும்? தடாதகை என்றால் எல்லா வகையிலும் மாறுபட்டவள் என்று பொருள். அவள் முக்கண்ணனாகிய சிவனுக்கு வாழ்க்கைப்பட இருந்தாள்.

அவருக்கு தன்னை வித்தியாசமான முறையில் காட்டிக்கொள்ள அவரைப் போலவே மூன்று தனங்களுடன் பிறந்தாள். தமிழ் வளர்த்த மதுரையை ஆளப் போவதால் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழைக் குறிக்கும் வகையில் மூன்று தனங்களுடன் பிறந்தாள் என்றும் சொல்வார்கள் அறிஞர்கள். அகரம், உகரம், மகரம் (அ,உ,ம) என்னும் எழுத்துக்களின் கோர்வையே ஓம் என்னும் பிரணவமாகும். அவளை பிரணவத்தின் வடிவம் என்றும் குறிப்பிடலாம். இப்படி, செல்வாக்கோடு பிறந்த மகள் செல்வாக்கோடு வளர்ந்தாள். அந்த மகள் பருவத்துக்கு வந்ததும் அவளை மதுரையின் மகாராணியாக பட்டாபிஷேகம் செய்து வைத்தான் மலையத்துவஜன். அவளது ஆட்சியில் காலாகாலத்தில் மழை பொழிந்தது. நீதி தவறாத ஆட்சி, தர்மத்தில் உயர்ந்த ஆட்சி என்று மக்கள் புகழ்பாடினர். மலையத்துவஜ மன்னன் தனது மகளிடம், நீ எட்டுத்திக்கும் சென்று எல்லா நாடுகளையும் உனதாட்சியின் கீழ் கொண்டு வர வேண்டும், தேவர் உலகமும் உனக்கு அடிமைப்பட வேண்டும். உன்னிலும் வீரமிக்கவர் உலகில் இல்லை என்ற நிலை வர வேண்டும், என்றான். தடாதகை பிராட்டியாரும் அவ்வாறே செய்தாள். இதனிடையே மலையத்துவஜமன்னன் நோய்வாய்ப்பட்டான். தன்னுடைய இறுதிக்காலம் நெருங்குவதை உணர்ந்த அவன் மந்திரி சுமதியை அழைத்து,மந்திரியாரே! அரசியாரைப் பற்றிய ரகசியம் ஒன்றைச் சொல்கிறேன். இதை உம்மைத் தவிர யாருக்கும் தெரிய வேண்டாம், எனச் சொல்லி, மூன்று தன ரகசியத்தையும், கயிலாசநாதனாகிய சிவபெருமான் அவள் முன் தோன்றியதும், ஒரு தனம் மறையுமென்பதையும், அவர்களுக்கு திருமணம் நடக்கும் என்ற விபரங் களையும் சொன்னான். பின்னர் அவனது உயிர் பிரிந்தது.

 
மேலும் 64 திருவிளையாடல் »
பெரிய தர்மம் செய்தால் தான் இறை ஆசி கிடைக்கும் என்பதில்லை. சிறிய தொண்டு கூட கருணையைப் பெற்றுத் தரும். ... மேலும்
 
temple news
ஒரு செயலைத் தொடங்கும் முன், அந்த செயல் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டால், மிகவும் ... மேலும்
 
temple news
இந்திரனின் வாகனமான ஐராவதம் அவனுக்காக காத்து நின்றது. கருடனால் பாம்பை பிடிக்க முடியும்... ஆனால், அது ... மேலும்
 
temple news
மதுரை மாநகரம் இயற்கையாக எழுந்ததல்ல. அது உருவாக்கப்பட்ட ஒரு நகரம். அதை உருவாக்கி அருளியவரும் ஆலவாய் ... மேலும்
 
temple news
உலகத்துக்கே ஒரு தாயை ஈன்றெடுத்துக் கொடுத்த காஞ்சனமாலையும், உலகத்தாயான தடாதகைபிராட்டியும் தங்கள் குல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar