பதிவு செய்த நாள்
09
அக்
2013
10:10
சேலம்: சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள சொர்ணாம்பிகை தாயார் சன்னதி, நேற்று காலை திறக்கப்படாததால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சேலம் நகரில், பழமை வாய்ந்த கோவிலாக சுகவனேஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில், சொர்ணாம்பிகை தாயார் சன்னதியும் உள்ளது. கோவில் பூஜை செய்ய ஒரு அர்ச்சகர், ஒரு உதவி அர்ச்சகர் மற்றும் பத்து பதிலி அர்ச்சகர்கள் உள்ளனர். விழாக்காலங்களை தவிர மற்ற நாட்களில், பூஜையில் ஈடுபடுவதை அர்ச்சகர்கள் குறைத்துள்ளதாக, கடந்த ஆண்டு புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக, அறநிலையத்துறை இணை ஆணையர் விசாரணை நடத்த வேண்டும் என, ஆணையர் உத்தரவிட்டிருந்தார். கடந்த மாதம், ஒவ்வொரு அர்ச்சகருக்கும் தனித்தனியாக சன்னதி ஒதுக்கி உத்தரவிடப்பட்டது. நவராத்திரி பண்டிகையையொட்டி, அதிகமான பெண்கள் சொர்ணாம்பிகை தாயாரை தரிசிக்க வருகின்றனர். நேற்று காலை, 8.15 மணி வரை, சொர்ணாம்பிகை தாயார் சன்னதி திறக்கப்படாததால், பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். நேற்று காலையில் நடை திறக்கப்படாதது தொடர்பாக, கோவில் செயல் அலுவலரும், சேலம் மண்டல இணை ஆணையருமான மங்கையர்கரசிக்கு தகவல் சென்றது. அவர் கோவிலுக்கு சென்று, அங்குள்ள அர்ச்சகர்களிடமும், பணியாளர்களிடமும் நேரடி விசாரணையில் ஈடுபட்டார். மேலும், அர்ச்சகர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.