ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணவ தேவி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய பயண அட்டை திட்டம் அறிமுகமாகியுள்ளது. ரியாசி மாவட்டத்தில், கத்ரா பகுதியில் உள்ள வைஷ்ணவ தேவி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட முகாமிற்கு வந்த, ஜம்மு - காஷ்மீர் மாநில கவர்னர் என்.என்.ஓரா, இத்திட்டத்தை துவக்கி வைத்தார். இப்புதிய திட்டத்தின்படி, கோவிலுக்கு வரும் ஒவ்வொரு பக்தருக்கும், அவர்களுடைய புகைப்படத்துடன் கூடிய, பயண அட்டை வழங்கப்படும். அதேபோன்று, கோவில் நிர்வாகத்தின் தகவல் வங்கியிலும், பக்தர்களின் புகைப்படம் மற்றும் தகவல்கள் சேமித்து வைக்கப்படும். எதிர்பாராதவிதமாக பக்தர்கள் பாதிக்கப்பட்டால், அவர்கள் குறித்த தகவல்களை அறிய, இத்திட்டம் உதவியாக இருக்கும்.