பதிவு செய்த நாள்
09
அக்
2013
10:10
ஸ்ரீபெரும்புதூர்: கோவிலுக்குச் சொந்தமான, 30 கோடி ரூபாய் மதிப்பிலான, 13.65 ஏக்கர் நிலத்தை, அறநிலையத் துறை மீட்டுள்ளது. அதில் இருந்த ஆக்கிரமிப்புகள், அதிரடியாக அகற்றப்பட்டன. இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள பக்தர்கள், இதுபோல், கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர். நீண்டகால அடிப்படையில்... ஸ்ரீபெரும்புதூர், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலுக்குச் சொந்தமாக, ஸ்ரீபெரும்புதூர், தண்டலம், சென்னை ஆகிய இடங்களிலும் ஆந்திரா, மேற்குவங்காளம் உள்ளிட்ட மாநிலங்களிலும், நிலங்கள் மற்றும் கட்டடங்கள் உள்ளன. கோவிலுக்குச் சொந்தமான சொத்துகளை, நீண்ட கால குத்தகைக்கும், மாதாந்திர வாடகைக்கும் அறநிலையத் துறை நிர்வாகம் விடுகிறது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த, தண்டலம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில், அதிகேசவப் பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான, 13.65 ஏக்கர் நிலம் உள்ளது. இது கடந்த, 1982ம் ஆண்டு, சென்னையைச் சேர்ந்த மோகன், ஸ்ரீதேவி பிரடரிக் ஆகியோருக்குக் குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. இந்த நிலம், நேற்று மீட்கப்பட்டு உள்ளது.
நிலத்தை மீட்க அறநிலையத் துறை தெரிவித்துள்ள காரணங்கள்:
* முறையாகக் குத்தகைப் பணம் செலுத்தவில்லை.
* அனுமதியில்லாமல் கிணறு தோண்டுதல்; கட்டடம் கட்டுதல்.
* நிலத்தில் அனுமதி இல்லாமல், மா, தென்னை, தேக்கு போன்ற மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இந்த காரணங்கள் அடிப்படையில், நிலம் மீட்கப்பட்டு உள்ளதாக, அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நில மீட்பு நடவடிக்கை, நேற்று காலை நடந்தது. அறநிலையத் துறை அதிகாரிகள் மேற்பார்வையில், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் செயல் அலுவலர் தியாகராஜன், மற்றும் கோவில் ஊழியர்கள் ஆக்கிரமிப்பை அகற்றினர். ஜே.சி.பி., இயந்திரம் மூலம், கம்பி சுற்றுச்சுவர் அகற்றப்பட்டது. சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டப்பட்டுள்ள, கட்டடத்திற்கு, சீல் வைத்தனர். மா, தென்னை, தேக்கு மரங்கள் கணக்கெடுக்கப்பட்டன. கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள், எல்லைகள் குறிக்கப்பட்டன. மீட்கப்பட்ட இடத்தில், இது ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலுக்குச் சொந்தமானது, என, அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, காஞ்சிபுரம் அறநிலையத் துறை, உதவி ஆணையர் மோகனசுந்தரம் கூறுகையில், ஆக்கிரமிப்பை அகற்ற இணை ஆணையர் உத்திரவிட்டதை அடுத்து, நடவடிக்கை எடுக்கப்பட்டது, என்றார். கோவில் நிலத்தை நீண்ட கால அடிப்படையில் குத்தகை எடுத்திருந்த சென்னையைச் சேர்ந்த மோகன் என்பவர், ஆக்கிரமிப்பு அகற்றிய போது, அங்கு வந்து, உதவி ஆணையரிடம் கெஞ்சினார். அவர் கூறுகையில், குத்தகை சரியாக பாக்கி இல்லாமல் செலுத்தி வருகிறேன். அப்படி இருந்தும், ஆக்கிரமிப்பு என்று அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். அரசியல் தலையீட்டால் இப்படி நடந்து கொள்கின்றனர், என்றார்.
மீண்டும் குத்தகைக்கா? மீட்கப்பட்ட நிலம் மீண்டும் குத்தகைக்கு விடப்படுமா என்று, அறநிலையத் துறை உதவி ஆணையர் மோகனசுந்தரத்திடம் கேட்டபோதுநிலத்தை மீட்டு, அதைப் பாதுகாப்பது என்பது நீண்ட வழிமுறைகளைக் கொண்டது. இந்த நிலத்தை மீட்டு விட்டோம். அறநிலையத் துறை கமிஷனர் உத்தரவின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். ஸ்ரீபெரும்புதூர் பக்தர்கள் கூறுகையில், கோவில் நிலங்களை இது போன்று மீட்டு, அவற்றை பாதுகாக்க வேண்டும். அனைத்து கோவில் நிலங்களையும் மீட்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கூறினர்.