பதிவு செய்த நாள்
09
அக்
2013
11:10
ஊத்துக்கோட்டை: பரதீஸ்வரர் கோவிலில் நடந்து வரும், நவராத்திரி விழாவில், உற்சவர் சிவலிங்க அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஊத்துக்கோட்டை அடுத்த, தாராட்சி கிராமத்தில் அமைந்துள்ளது பரதீஸ்வரர் கோவில். சமீபத்தில் கும்பாபிஷேக விழா நடந்த, இக்கோவிலில், 10 நவராத்திரி விழா கடந்த, 5ம் தேதி துவங்கியது. முதல் நாள் காலை, 6:00 மணிக்கு மூலவர் பரதீஸ்வரர், அன்னை லோகாம்பிகை ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து ஹோமம் வளர்த்து, சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை, 5:00 மணிக்கு உற்சவர் அலங்கரிக்கப்பட்டு, சிவலிங்கத்தை தன்னகத்தே கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். நேற்று துர்க்கை அலங்காரத்தில் அருள் பாலித்தார். இன்று மாலை, அன்ன பூரணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இறுதி நாளான, வரும், 14ம் தேதி மகிஷாசூரமர்த்தினி அலங்காரம் செய்யப்படும்.