பதிவு செய்த நாள்
10
அக்
2013
10:10
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் முக்கியமான கருட சேவை நேற்று நடந்தது. ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான நேற்று காலை, மலையப்ப சுவாமி, மோகினி அவதாரத்தில் உலா வந்தார். அவருடன், ஸ்ரீகிருஷ்ணரும் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார். பிரம்மோற்சவத்தின் முக்கிய சேவையான கருடசேவை, நேற்று இரவு, 8:00 மணிக்கு துவங்கியது. கருட வாகனத்தில் வந்த மலையப்ப சுவாமிக்கு, ஏழுமலையான் மூலவருக்கு அணிவிக்கப்படும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 1008 சகஸ்ர காசு மாலை, 108 லட்சுமி உருவம் பதித்த ஆரம், மகர கண்டி ஆகியவை அணிவிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தின் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து வந்த ஆண்டாள் மாலையும் அணிவிக்கப்பட்டது. கருட சேவையின் போது, சென்னையில் இருந்து வந்த குடைகள் ஊர்வலத்தில் கொண்டு வரப்பட்டது.
இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி: திருமலையில், நேற்று, இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதால், திருப்பதி, காளஹஸ்தி போன்ற சுற்றுப்பகுதிகளில் உள்ள பகதர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். இதனால், பிரம்மோற்சவத்தின் துவக்க நாளில் குறைவாக இருந்த பக்தர்கள் கூட்டம் நேற்று அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் முழுவதும், 60,000 பேர் ஏழுமலையானை தரிசித்தனர். திருப்பதி செயல் இணை அதிகாரி மாற்றம்: தேவஸ்தானத்தின், திருப்பதி செயல் இணை அதிகாரி வெங்கட்ராமி ரெட்டிக்குப் பதிலாக, ஸ்ரீகாகுளம் மாவட்ட துணைக் கலெக்டர் பாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். பிரம்மோற்சவம் முடிந்த பிறகு, பதவியேற்பு விழா நடைபெறும்.
திருச்சானூரில் பலத்த பாதுகாப்பு: திருப்பதியை அடுத்த புத்தூரில், தீவிரவாதிகள் கைது செயயப்பட்டதைத் தொடர்ந்து, திருப்பதி தேவஸ்தானத்திற்குட்பட்ட திருச்சானூர் உட்பட அனைத்து கோவில்களிலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக, பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தாலும், நீண்ட தூர தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், பக்தர்கள் மனவேதனை அடைந்துள்ளனர்.
திருப்பதி ரயில் நிலையத்தில் தொடுதிரை கருவி: திருப்பதி ரயில் நிலைய நடைமேடைகளில், 30 தொடுதிரை கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆறு மாதத்திற்கு முன் திட்டமிடப்பட்ட இப்பணி, ஒப்பந்ததாரருக்கும், ரயில்வே அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னையாலும் தடை பட்டது. மேலும், கருவியில் மென்பொருள் பதிவேற்றம் செய்யும் பணியில் ஏற்பட்ட தாமதத்தி"ற்குப் பிறகு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 150 தொடுதிரை கருவிகள் குண்டக்கல், திருப்பதி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளதாக, திருப்பதி ரயில் நிலைய மேலாளர் கூர்மாராவ் தெரிவித்தார்.