பழநி: நவராத்திரி விழா முடிவடைந்ததையடுத்து பழநி கோயிலில் நேற்று திங்கள் முதல் தங்கரதப் புறப்பாடு தொடங்கி உள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த வாரம் நவராத்திரி விழா ஆரம்பமானது. நவராத்திரியையொட்டி நாள்தோறும் கோயிலில் சிறப்பு அபிஷேக பூஜைகள், நவராத்திரி பூஜைகள் நடைபெற்றன. சரஸ்வதி பூஜையான ஞாயிறன்று முக்கிய நிகழ்ச்சியான வன்னிகாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்றைய தினம் மாலை சாயரட்சை பூஜையைத் தொடர்ந்து இரவு மலைக்கோயில் நடை சாத்தப்பட்டது.
மலைக்கோயிலில் இருந்து பாரசக்திவேல் படிப்பாதை வழியாக கீழே கொண்டுவரப்பட்டு பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசாமி, பராசக்திவேல், கேடயம், வில், அம்புடன் கோதை மங்கலம் புறப்பட்டார். கோதைமங்கலம் கோதையீஸ்வரன் கோயில் முன் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின், முத்துக்குமாரசாமி பெரியநாயகி அம்மன் கோயிலுக்கும், பராசக்திவேல் மலைக்கோயிலுக்கும் வந்ததையடுத்து நள்ளிரவில் அர்த்தஜாம பூஜை நடைபெற்றது. திங்கள்கிழமை பூஜை நடைபெற்றது. புறப்பாடு வழக்கம் தொடங்கியது.