பதிவு செய்த நாள்
15
அக்
2013
10:10
தூத்துக்குடி: தூத்துக்குடி வடபாகம் சந்தனமாரியம்மன் கோயில் தசரா விழாவை ஒட்டி நடந்த அன்னதானத்தை எம்.எல்.ஏ., செல்லப்பாண்டியன் துவக்கி வைத்தார். தூத்துக்குடி பகுதியில் உள்ள பெரும்பாலான அம்மன் கோயில்களில் தசரா விழா கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கொண்டாடப்பட்டு வருகிறது. தினமும் அம்மன் வீதி உலா, திருவிளக்கு பூஜை, வாண வேடிக்கை, மேளதாளம் என்று தூத்துக்குடி மாநகர பகுதிகளே களை கட்டி காணப்படுகிறது. தூத்துக்குடி வடபாகம் சந்தனமாரியம்மன் கோயிலில் கடந்த 17ம் தேதி முதல் தசரா திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. நேற்று கோயிலில் முக்கிய நிகழ்ச்சியாக சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடந்தது. கோயில் வளாகத்தில் நடந்த அன்னதானத்தை தூத்துக்குடி எம்.எல்.ஏ., செல்லப்பாண்டியன் துவக்கி வைத்தார். நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் தலைமை வகித்தார். கோயில் நிர்வாக குழு உறுப்பினர்கள் அன்பழகன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 34 வட்ட அதிமுக நிர்வாகி மூர்த்தி, அரசு போக்குவரத்துகழக அண்ணா தொழிற்சங்க நிர்வாகி சங்கர், மாநகராட்சி கவுன்சிலர்கள் பொன்ராஜ், செல்வராஜ், பெரியசாமி, தனம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஞான்ராஜ், அதிமுக நிர்வாகிகள் ஜீவாபாண்டியன், பேச்சிமுத்து, அருண்குமார், ராஜா வினோத்குமார், வட்டச் செயலாளர்கள் சந்தனராஜ், சகாயராஜ், கந்தன் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அன்ன தானத்தில் கலந்து கொண்டனர்.