ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் கும்பாபிஷேகத்திற்கு தயாராகிறது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2013 11:10
ஸ்ரீவில்லிபுத்தூர்: 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், தமிழக அரசின் சின்னமுமான ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோயில் கோபுரத் திருப்பணிகள் நிறைவுபெற்று கும்பாபிஷேகத்துக்குத் தயாராக உள்ளது. இக்கோபுரம் 11 அடுக்குகளைக் கொண்டதுடன் 192 அடி உயரம் உள்ளது. இது 12 ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாரால் கட்டப்பட்டது. ஆண்டாளை எடுத்து வளர்த்த தந்தையாகிய இவர், தனது மருமகனாகிய பெருமாளுக்கு இக்கோபுரத்தைக் கட்டினார் என்றும், பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனையில் நடைபெற்ற விவாதங்களில் வெற்றிகொண்டு, தாம் பெற்ற பொன்முடிப்பைக் கொண்டு இதைக் கட்டி முடித்தார் என்றும் புராணம் கூறுகிறது.
கடந்த 2000ல் இக்கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்குள்ள பெரியாழ்வார் சன்னிதி, வடபத்ரசாயி கோயில்களில் தங்கக் கொடி மரம் அமைக்கும் பணி மற்றும் கோபுரம் புனரமைக்கும் பணிகள் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் தொடங்கின. தற்போது சுமார் 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 2014 ஜனவரியில் இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் எனக் கோயில் நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து, கோயிலின் தக்கார் கே.ரவிச்சந்திரன் கூறியது. கோபுரத்திருப்பணிக்கு இந்து சமய அறநிலையத்துறை ரூ 45 லட்சம் வழங்கியுள்ளது. முதலில் இக்கோபுரத்தின் கும்பாபிஷேகம் நடத்தப்படும். பின்னர் ஆண்டாள் கோயிலின் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.