பதிவு செய்த நாள்
15
அக்
2013
12:10
கோலாலம்பூர்: முஸ்லிம் அல்லாதோர், அல்லா என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என, மலேசிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மலேசியாவிலிருந்து வெளிவரும், கத்தோலிக்க பத்திரிக்கை, அல்லா என்ற சொல்லை, தனது இதழில் பயன்படுத்தி வந்தது. இதை எதிர்த்து, பழமைவாத முஸ்லிம்கள், அங்குள்ள தேவாலயத்தின் மீது, தாக்குதல் நடத்தினர். முஸ்லிம் அல்லாதோர், அல்லா என்ற சொல்லை பயன்படுத்துவதால், குழப்பம் ஏற்படுகிறது. எனவே, மற்றவர்கள் இந்த சொல்லை பயன்படுத்த வேண்டாம் என, மலேசிய உள்துறை அமைச்சகம், 2009ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, கத்தோலிக்க பத்திரிகை, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அல்லா என்ற சொல் கடவுளை குறிக்கிறது. எனவே, இந்த சொல்லை பயன்படுத்த கோர்ட், அனுமதி அளித்தது. ஆனால், ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து, மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை, மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் நேற்று, விசாரித்தது. முஸ்லிம் அல்லாதவர்கள், அல்லா என்ற சொல்லை பயன்படுத்தக்கூடாதுஎன நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். இஸ்லாம் மதம் தோன்றுவதற்கு முன்னரே, அல்லா என்ற சொல் வழக்கில் உள்ளது. கடவுள் என்பதை குறிக்கும் இந்த சொல்லை அனைவரும் பயன்படுத்த உரிமை உண்டு. மேல் கோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக, கத்தோலிக்க பத்திரிக்கை தெரிவித்துள்ளது.