பதிவு செய்த நாள்
15
அக்
2013
12:10
திருப்பதி: ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள கனகதுர்க்கை அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் நவராத்திரி விழாவின்போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்படும். இந்த ஆண்டு , தேவஸ்தான துணை செயல் அதிகாரி ராமமூர்த்தி ரெட்டி, அர்ச்சகர் பாலச்சந்திரா மற்றும் இருவர், பட்டு வஸ்திரங்களை கொண்டு சென்றனர். கோவில் வாசலில், கனகதுர்க்கை கோவில் செயல் அதிகாரி பிரபாகர் ஸ்ரீநிவாஸ் மற்றும் தலைமை அர்ச்சகர் சிவபிரசாத் சர்மா ஆகியோர் வரவேற்றனர். அதற்குப் பிறகு, பிரபாகர் சென்றுவிட்டார். வஸ்திரங்களுடன் வந்தவர்களை, கோவில் முன் வாசல் வரை அழைத்துச் சென்ற, தலைமை அர்ச்சகரும் சென்றுவிட்டார். எப்போதும், கோவிலுக்குள் அழைத்துச் சென்று, அம்மனை தரிசிக்க செய்து, அம்மனின் வஸ்திரத்தை அளித்து மரியாதை செய்பவர்கள், இம்முறை கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டனர். தலைமை அர்ச்சகருக்கும், கருவறை அர்ச்சகருக்கும் பிரச்னை இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அறங்காவலரிடம் கேட்டபோது, இந்த சம்பிரதாயங்கள் எனக்குத் தெரியாது, தலைமை அர்ச்சகருக்குத்தான் தெரியும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.