பதிவு செய்த நாள்
15
அக்
2013
12:10
ஜெட்டா:
சவுதி அரேபியாவில் வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளதால், இந்த ஆண்டு, ஹஜ்
யாத்திரிகர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பக்ரீதையொட்டி, சவுதி
அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு, உலகம் முழுவதும் இருந்து ஏராளமான முஸ்லிம்
யாத்திரிகர்கள், புனித பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு, 32 லட்சம்
பேர், பக்ரீத் பண்டிகையின் போது, மெக்காவில் கூடினர். இந்த ஆண்டு,
இந்தியாவிலிருந்து, 1.36 லட்சத்துக்கும் அதிகமானவர்கள், புனித பயணம்
மேற்கொண்டுள்ளனர். தற்போது, அரேபியாவில், நுரையீரலை பாதிக்கும் வைரஸ்
காய்ச்சல் பரவலாக காணப்படுகிறது.இந்த ஆண்டில் இதுவரை, 50 பேர் இந்த
காய்ச்சலால், உயிரிழந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சவுதி அரசு,
நோயாளிகள் பலரை , ஹஜ் பயணத்துக்கு வரவேண்டாம் என தடுத்து விட்டது. இதன்
காரணமாக, கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு, ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை, 20
சதவீதம் குறைந்துள்ளது. இந்தியாவிலிருந்து, 295 பேர் கொண்ட மருத்துவ குழு
உள்ளிட்ட, 546 பேர், அரேபியாவுக்கு சென்றுள்ளனர். இவர்கள்,
யாத்திரிகர்களின் உடல் நலனை பரிசோதித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம், ஹஜ்
யாத்திரை துவங்கியது. இதையடுத்து, லட்சக்கணக்கான முஸ்லிம்கள், மினா நகரில்
நேற்று முன்தினம் கூடினர். நேற்று, அவர்கள், அராபத் மலைக்கு சென்றனர்.
18ம்தேதி, ஹஜ் யாத்திரை நிறைவு பெறுகிறது.
சாதனை: சவுதி அரேபியாவை
சேர்ந்த, சுலைமான்,80, இந்த ஆண்டு, 60வது முறையாக, மெக்காவுக்கு பயணம்
மேற்கொண்டு, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளார். முதல் முறையாக,
கடந்த, 1954ம் ஆண்டு, சுலைமான், அவரது தந்தையுடன், மெக்காவுக்கு பயணம்
மேற்கொண்டார். அப்போது, இரண்டு வாரம் பயணித்து, மெக்காவுக்கு வந்ததாகவும்,
அந்த காலத்தில் போதுமான போக்குவரத்து வசதி இல்லை, என்றும்
குறிப்பிட்டுள்ளார்.
அமைதி பயணம்: பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர்
ஒருவர், அமைதியை வலியுறுத்தி, பாதயாத்திரையாக, புனித நகரமான மெக்காவை
அடைந்து, தனது ஹஜ் பயணத்தை நிறைவு செய்துள்ளார். பாகிஸ்தானின், கசரத் ராய்,
கடந்த மூன்றரை மாதங்களுக்கு முன், இந்த பாதயாத்திரையைத் துவக்கினார்.
இம்மாதம், 1ம் தேதியன்று, மெக்காவை அடைந்த இவரை, சவுதி அரசு அதிகாரிகள்
வரவேற்றனர். ஏற்கனவே, தனது பாத யாத்திரைகள் மூலம், இருமுறை சாதனை
படைத்துள்ள, கசரத் ராய், உலகம் முழுவதும் அமைதி நிலவவும், பயங்கரவாதத்தை
எதிர்த்தும், இவ்வாறு பாதயாத்திரையாக மெக்காவிற்கு வந்ததாகக் கூறியுள்ளார்.
தற்போது, 6,387 கி.மீ., தூரம் பாதயாத்திரையாக மெக்காவை அடைந்து சாதனை
படைத்துள்ளார்.