பதிவு செய்த நாள்
16
அக்
2013
11:10
குற்றாலம்: குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயிலில் ஐப்பசி விசுத் திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் ஐப்பசி விசுத் திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டு இத்திருவிழா கடந்த 9ம்தேதி துவங்கியது. திருவிழா வரும் 18ம்தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. முதல் நாள் காலை 5.20 மணிக்கு மேல் 6.20 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து இலஞ்சி குமரன் வருகையும், மாலையில் வெள்ளி ஏகசிம்மாசனத்தில் பவனியும் நடந்தது. கடந்த 10ம்தேதி காலை வெள்ளி சப்பரத்தில் இலஞ்சி குமரன் பவனியும், சுவாமி, அம்பாள் வெள்ளி ஏகசிம்மாசனத்தில் காட்சியும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டத்தை குற்றாலம் டவுன் பஞ்., தலைவர் லதா அசோக்பாண்டியன், கோயில் செயல் அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் வடம்பிடித்து துவக்கி வைத்தனர். முதலில் விநாயகர், முருகன், குற்றாலநாதர், குழல்வாய்மொழியம்பாள் ஆகிய நான்கு தேர்கள் இழுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் அறங்காவலர்குழு தலைவர் தங்கம்பலவேசம், முன்னாள் உறுப்பினர் வீரபாண்டியன், அ.தி.மு.க., ஜெ.,பேரவை இணை செயலாளர் அசோக்பாண்டியன், இளைஞர் பாசறை செயலாளர் சுரேஷ், பா.ஜ., நகர தலைவர் செந்தூர்பாண்டியன், ஒன்றிய பொருளாளர் திருமுருகன், பிலவேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இன்று (16ம் தேதி) சித்திர சபையில் நடராஜ மூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது. இறுதி நாளான வரும் 18ம்தேதி காலை 10 மணிக்கு தீர்த்தவாரியும் தொடர்ந்துதிருவிலஞ்சிகுமரனுக்கு பிரியாவிடை அனுப்பும் வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் கண்ணதாசன், செயல் அலுவலர் வெங்கடேஷ், மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்காசி ஏ.எஸ்.பி., அரவிந்தன் ஆலோசனையின் பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன் மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.