பதிவு செய்த நாள்
17
அக்
2013
11:10
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், திருமேனிகள் பாதுகாப்பு மையம், இடம் மாற்றப்பட்டுள்ளதோடு, திட்ட மதிப்பீட்டு தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பழமையான கோவில்களில் உள்ள உற்சவ மூர்த்திகளின் சிலைகள், சிறந்த கலை நுணுக்கத்துடன் ஐம்பொன், தங்கம் உள்ளிட்ட உலோகங்களால் உருவாக்கப்பட்டுள்ளன. நூற்றாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சிலைகள், விலை மதிக்க முடியாதவை. கோவில்களில் போதிய பாதுகாப்பு இல்லாத நிலையில், சிலைகள் திருடப்பட்டு பல கோடி ரூபாய்க்கு விற்கப்படுவதோடு, வெளி நாடுகளுக்கும் கடத்தப்பட்டு வந்தன. இதற்கு தீர்வு காணும் வகையில், சிலைகளை பாதுகாப்பு மையத்தில் வைக்கவும், மாவட்டத்திற்கு ஒரு திருமேனிகள் பாதுகாப்பு மையம் அமைக்க அரசு உத்தரவிட்டது.திருப்பூர் மாவட்டத்திலுள்ள கோவில்களுக்கு சொந்தமான 500க்கும் மேற்பட்ட சிலைகள், பேரூரில் உள்ள பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் கோவில்களின் சிலைகளை பாதுகாப்பாக வைக்க, காங்கயத்திலுள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் இடத்தில் பாதுகாப்பு மையம் அமைக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டது. போதிய பாதுகாப்பு, போக்குவரத்து வசதி இல்லாதது ஆகிய காரணங்களினால், சிவன்மலை சுப்ரமணியசாமி கோவில் இடத்தை புதி தாக தேர்வு செய்து, பாதுகாப்பு மையம் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. சிவன்மலை கோவிலுக்கு செல்லும் இடத்தில், இரண் டாவது வளைவு அருகில், ஒன்பது ஏக்கர் இடத்தில் அமைய உள்ளது.முதலில், 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட இருந்த மையத்தின் திட்ட மதிப்பீடும் உயர்த்தப் பட்டு, மூன்று அடுக்கு பாதுகாப்புடன், பெரிய மதில் சுவர்களுடன் அமைக்கப்பட உள்ளது. மேலும், ஒவ்வொரு கோவில் சிலைகளுக்கும் தனித்தனியாக, "ரேக் வழங்கப்பட்டு, தனியாக கதவு அமைக்கப்படுகிறது. இதன் மூலம் நான்கு அடுக்கு பாதுகாப்பு ஏற்படுவதோடு, சிலைகள் பாதிக்காத வகையில் போதிய வெளிச்சம், காற்று இருக்கும் வகையிலும் அமைக்கப்படுகிறது.எச்சரிகை அலாரம், "பயோ மெட்ரிக் முறையில், திருமேனிகள் ஒப்படைப்பு, எடுக்கும் அனைத்து பணிகளும் பதிவு செய்யப்பட்டு, வேறு நபர்கள் யாரும் நுழைய முடியாத பாதுகாப்பு ஏற்படுத்தப்படுகிறது. கூடுதல் பாதுகாப்பு வசதிகள் மற்றும் அதிநவீன முறைகள் அமல்படுத்தப்படுவதால், திட்ட மதிப்பீடு 92 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "திருமேனிகள் பாதுகாப்பு மையம் அமைப்பதற்கான திட்ட வடிவமைப்பு, நிதி ஒதுக்கீடு பணிகள் முடிவடைந்துள்ளன. கட்டுமான பணிக்கான டெண்டர் நடக்க உள்ளது. ஒரு மாதத்தில் பணிகள் துவங்கும், என்றார்.