பதிவு செய்த நாள்
23
அக்
2013
01:10
*கல்வியால் மட்டுமே மனிதன் மனிதனாக முடியும். கல்வி எப்படி மனிதனை உருவாக்குகிறதோ அப்படியே அவன் வளர்கிறான். கல்வியும், மனிதவாழ்க்கையும் பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்துள்ளன.
*உண்மையான கல்வி என்பது தகவல்களைச் சேகரிப்பது மட்டுமல்ல. அது மனதின் இயல்பான ஆற்றலை வளரச் செய்ய வேண்டும். மனிதனை திறம்பட சிந்திக்கத் தூண்டுவதாக அமைய வேண்டும்.
*வாழ்க்கைக்கான பொருள் தேடுவதற்கான வழிமுறையாக கல்வி மாறிவிட்டது. மனித வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாக மாறி விட்டது. மனப்போராட்டம், குடும்பம், சமூகப்பிரச்னையை மனிதன் சந்திக்க வேண்டியிருக்கிறது. இதற்கான தீர்வை நோக்கி வழிகாட்டுவதாக கல்வி அமைய வேண்டும்.
*உலகியல் அறிவைப் பெறுவதோடு, கல்வி ஆன்மிக அறிவையும் மாணவர்களுக்கு போதிக்க வேண்டும். முழுமையான கல்விக்கு இரண்டுமே அடிப்படையானது.
*மனிதனிடம் இருக்கும் நிறைநிலையை வெளிப்படுவதே கல்வியின் குறிக்கோள் என்று விவேகானந்தர் குறிப்பிடுகிறார். பண்பு, திறமை, தகுதி போன்றவை அனைத்தும் நம்மிடம் இருக்கின்றன. அறியாமையைப் போக்கும்போது இந்த உயர்பண்புகள் வெளிபடத் தொடங்குகின்றன.
*இன்றைய மாணவனே எதிர்காலத்தின் சமுதாயம். அதனால், மாணவப் பருவத்தில் இருந்தே நல்லொழுக்கத்துடன் வாழவும், சேவை மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருக்க கல்வி வழிகாட்ட வேண்டும்.
*கல்வித் திட்டத்தில், தினமும் தியானப்பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். தியானம் மூலம் மனம் ஒருமுகப்பட்டு விட்டால் மாணவர்களின் கிரகிக்கும் ஆற்றலும், படித்ததை நினைவில் கொள்வதும் எளிதாகி விடும்.
*இன்றைய மாணவன் படிப்பது அவ்வளவு சுலபமல்ல. தகவல் தொடர்பு சாதனங்கள், விளையாட்டு, கேளிக்கை நிகழ்ச்சிகள் என பல்வேறு வகையிலும் அவர்களின் மனம் அலைக்கழிக்கப்படுகிறது. இதனால், அவர்களால் மனதை படிப்பில் ஈடுபடுத்தமுடியாமல் போகிறது.
*பொழுதுபோக்கில் ஈடுபடும் மாணவனின் மனம் தொடர்ந்து 20 நிமிடம் கூட முழுமையான கவனத்துடன் பாடத்தை படிக்க முடியவில்லை எனஅமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு மனநோய் என கருதும் அளவிற்கு வளர்ந்துவிட்டதாக கூறுகின்றனர். தியானம் ஒன்றே இந்த நோயைக் குணப்படுத்த உதவும்.
*படிப்பு மட்டுமில்லாமல் விளையாட்டு, வேலை, சாப்பிடுவது என எதில் ஈடுபட்டாலும் அதை ஒரு தவமாகச் செய்ய மாணவர்களை பழக்க வேண்டும் என்கிறார் விவேகானந்தர்.
*சிறந்த குணம், மனவலிமை, அறிவு வளர்ச்சியை உண்டாக்குவதோடு, மாணவர்களை தன்னம்பிக்கையுடன் சொந்தக்காலில் நிற்கத் துணை செய்வதாக கல்வி அமைய வேண்டும். நம் நாட்டில் உள்ள எல்லாருமே சிறந்த கல்வி பெற்றவர்களாக மாற சபதம் ஏற்போம்.
*உணவு, தூக்கம், உடற்பயிற்சி, பொழுதுபோக்கு போன்றவற்றில் மாணவர்களுக்கு ஒரு ஒழுங்குமுறையை வகுக்க வேண்டும். இந்த ஒழுங்குமுறையே அவர்களை தீயபழக்கங்களுக்கு அடிமையாகமல் தற்காத்துக் கொள்ள உதவும்.
-பஜனானந்தர்