பதிவு செய்த நாள்
29
அக்
2013
10:10
பவானி: அகிலபாரத பாரதிய துறவியர் சங்கம் சார்பில் மூன்றாம் ஆண்டு அன்னை காவிரி புனித தீர்த்த யாத்திரை வருகை மற்றும் கொங்கு மண்டல துறவியர்கள் மாநாடு நடந்தது. கடந்த, 18ம் தேதி, கர்நாடக மாநிலம், தலைக்காவிரியில் அன்னை காவிரி புனித தீர்த்த ரத யாத்திரை புறப்பட்டு, பல ஊர்கள் வழியாக, பவானி கூடுதுறைக்கு வந்து அடைந்தது. ரதத்தில் கொண்டு வரப்பட்ட அன்னை காவிரி தாய்க்கு, பவானி சிவனடியார்கள் திருக்கூட்டத்தில் அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டது. மாலையில், கூடுதுறை முக்கூடல் சங்கமத்தில் உள்ள காவிரி ஆற்று படிதுறையில், காவிரி தாய்க்கு சிறப்பு அபிஷேகம், மலர்களால் அலங்காரம் செய்து கோவை, பேரூர்மடம் மருதாச்சல அடிகளார், கோவை கௌமாரமடம் குமரகுருபர அடிகளார் ஆகியோர் மஹா தீபாராதனை நடத்தி பூஜையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அம்மன் படிதுறையில், இரவு, 7 மணியளவில் காவிரி அன்னைக்கு விஷேக பூஜை செய்து, கங்கையில் நடப்பதுபோல, ஆரத்தி மற்றும் பூஜை வழிபாடு, மஹா தீபாரதனை நடந்தது. அங்கிருந்து, புறப்பட்டு, ஈரோடு வழியாக பல்வேறு ஊர்களுக்கு சென்று, நவம்பர், 10ம் தேதி பூம்புகாரில் உள்ள காவிரியில், காவிரி தாய்க்கு பூஜை செய்து, நிகழ்ச்சி நிறைவடைகிறது.
ரத யாத்திரை ஒருங்கிணைப்பாளர் ராமானந்தா, ரத்தின சைத்தான்யா மற்றும் பவானி சங்கமேஸ்வரர் கோவில் குருக்கள் மணிகண்டன், சிவனடியார் தியாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். யாத்திரை குறித்து காவிரி யாத்திரை ஒருங்கிணைப்பாளர் சுவாமி ராமானந்தா கூறியதாவது: பொதுமக்கள் காவிரியை வணங்கி, பாதுகாக்க வேண்டும். அதன் புனித்தை மாசுபடுத்தும் காரியங்களை செய்யக்கூடாது. காவிரி நீரை வீணாக்காமல் மக்கள் பயன்படுத்த வேண்டும். கூடுதுறையில் துணிகளை விடுவது, சோப்பு போட்டு குளிப்பது, பிளாஸ்டிக் பொருட்களை ஆற்றில் போடுவது போன்ற காரியங்களை தவிர்க்க வேண்டும். சாக்கடை கழிவு, ஆலை ரசாயன கழிவு, தோல் ஆலை கழிவு போன்றவைகளால் ஏற்படும் மாசுபடுதலை தவிர்க்க வேண்டும், என்பதை வலியுறுத்தி, இந்த புனித தீர்த்த ரத யாத்திரை நடத்தப்படுகிறது, என்றார்.