பதிவு செய்த நாள்
09
நவ
2013
11:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, நேற்று சூரசம்ஹார லீலை நடந்தது. இன்று காலை தேரோட்டம் நடக்கிறது.கோயிலில் நவ., 3 முதல் நடந்த யாகசாலை பூஜைகள் நேற்று காலை பூர்த்தி செய்யப்பட்டு, சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து, உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தங்கமயில் வாகனத்திலும், வீரபாகு தேவர் வெள்ளை குதிரை வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.சூரபத்மன் முன்செல்ல, வீரபாகு விரட்டி செல்ல, தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமியின் பிரதிநியான திருவிழா நம்பியார் ஆனந்த் சிவாச்சார்யார் வாள் கொண்டு செல்ல, அவர்களைத் தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி வேலுடன் சூரனை, எட்டு திக்குகளிலும் விரட்டிச் சென்று சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கு உடை, நகைகள், மாலைகள் சிவப்பு நிறத்தில் இருந்தன. சூரனை வதம் செய்ய சுவாமி கோபத்துடன் இருந்ததால், அனைத்தும் சிவப்பு நிறத்தில் இருந்தன.விழாக்காலங்களில், தெய்வானையுடன் வலம் வரும் சுப்பிரமணிய சுவாமி, தனியாக புறப்பாடாவது சூரசம்ஹாரத்திற்காக மட்டுமே. இன்று காலை சட்டத்தேரில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளுகின்றனர். அழகர்கோவில்: சோலைமலை முருகன் கோயிலிலும் சூரசம்ஹாரம் நடந்தது. பராசக்தியிடம் வேல்வாங்கிய முருகப் பெருமான், 3.30 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பட்டு, சூரசம் ஹாரம் செய்தார். மாலை 5 மணிக்கு முருகப் பெருமானுக்கு சாந்த அபிஷேகம் நடந்தது. இன்று (நவ.,9) காலை 7 மணிக்கு மகா அபிஷேகம், காலை 10 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.