பதிவு செய்த நாள்
09
நவ
2013
11:11
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஆட்சிஸ்வரர் கோவில் இளங்கிளி அம்மனுக்கு, தேர் செய்யும் பணி மும்முரமாக நடந்தது.அச்சிறுபாக்கத்தில் உள்ள ஆட்சிஸ்வரர் கோவில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக இரண்டு தேர்கள் இருந்தன. இவை முறையாக பராமரிக்கப்படாததால் பழுதடைந்தன. அச்சிறுபாக்கம் கிராம மக்கள் ஒன்றிணைந்து, 20 லட்சம் ரூபாய் மதிப்பில், கடந்த, 2007ம் ஆண்டு, ஒரு தேர் செய்தனர். இத்தேரில், விழா காலங்களில் ஆட்சிஸ்வர் உலா வருவார். இளங்கிளி அம்மன் சிறு வாகனத்தில் வருவார்.இந்நிலையில், கிராம மக்கள் நன்கொடை வசூலித்து இளங்கிளி அம்மனுக்கு தனி தேர் செய்ய முடிவு செய்தனர். கடந்த ஏப்ரல் மாதம், பெறப்பட்ட நன்கொடைகளில், 36 அடி உயரத்தில், தேர் செய்யும் பணியைத் துவக்கினர். தேர் செய்யும் பணிகள் முடிவுற உள்ள நிலையில், வரும் தை மாதம், (2014, ஜனவரி) வெள்ளோட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.