பதிவு செய்த நாள்
12
நவ
2013
10:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கிரிவலம் செல்லும் பக்தர்கள் மற்றும் கோவிலுக்குள் செல்ல முடியாத பக்தர்கள், மஹா தீபத்தை காண வசதியாக கிரிவலப்பாதை முழுவதும், 34 அகன்ற திரை அமைக்க, போலீஸார் ஏற்பாடு செய்துள்ளனர். திருவண்ணாமலை, கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மஹா தீபம் வரும், 17ம் தேதி மாலை, 6 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை மீது ஏற்றப்படவுள்ளது. இந்த தீபம், திருவண்ணாமலை சுற்றியுள்ள, 40 கி.மீ., தூரம் வரை தெரியும். கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் மட்டுமே, பஞ்ச மூர்த்திகள் தரிசனத்துடன், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வரும் அர்த்தநாரீஸ்வரர் நடன காட்சியுடன், மஹா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை காண முடியும். இதற்கு கோவிலுக்குள், 10 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கப்படுவர். மற்ற பக்தர்கள், இத்தரிசனத்தை காண முடியாது. தீபத் திருவிழாவின் போது, செங்கம் கூட்டு சாலையிலிருந்து, அடி அண்ணாமலை வரை, ஆறு கி.மீ., தூரம் வரை அடுக்கடுக்காக அமைந்துள்ள மலைகளின் அமைப்பு காரணமாக, கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு மலையில் ஏற்றப்படும், மஹா தீபம் தெரிவதில்லை. மஹா தீபத்தை, பக்தர்கள் காண்பதற்கு வசதியாக கடந்த, நான்கு ஆண்டுகளாக மாட வீதியில், மூன்று அகன்ற திரைகளும், கோவிலின் வெளி பிரகாரத்தில், மூன்று அகன்ற திரைகளும் அமைத்து, மஹா தீப நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. வரும், 17ம் தேதி கார்த்திகை தீபத்தை ஒட்டி, பக்தர்கள் மஹா தீபம் மற்றும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கோவிலில் இருந்து வெளியே வந்து நடனமாடும் அர்த்தநாரீஸ்வரர் காட்சியையும், ஒரே நேரத்தில் காண வசதியாக, போலீஸார், 34 அகன்ற திரை மூலம் ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.