பதிவு செய்த நாள்
12
நவ
2013
03:11
* விளக்குகளை நன்றாக கழுவி, சுத்தமான தாம்பளம் அல்லது பலகையில் வைக்கவேண்டும். உடைந்த, கீறல் விளக்குகளை பயன்படுத்தக் கூடாது.
* ஏற்றியபின்பு அசையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
* விளக்கிற்கு மாலை மற்றும் மாங்கல்ய கயிறை சூட்ட வேண்டும்.
* சுடரில் இருந்து பத்தி, சூடம் கொளுத்தக் கூடாது. தீப்பெட்டியே பயன்படுத்த வேண்டும்.
* எண்ணெயை அடிக்கடி ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக் கொள்ளவேண்டும். திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும்.
* வீடுகளில் பூஜை செய்யும்போது, விளக்கை கிழக்கு நோக்கி வைத்து அதற்கு வலப்புறத்தில் வடக்கு முகமாக அமர்ந்து கொள்ள வேண்டும்.
* விளக்கை தீக்குச்சியால் நேரடியாக ஏற்றாமல், துணைவிளக்கை ஏற்றி, அதன் மூலமே ஏற்ற வேண்டும்.
* பூஜை முடியும்வரை ஸ்லோகங்களை ஒரே மாதிரியான குரலில் சொல்ல வேண்டும். ஒருவர் உயர்த்தியும், ஒருவர் தாழ்த்தியும் குரல் கொடுக்கக்கூடாது.
விளக்கு பூஜை மாத பலன்
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, அமாவாசை மற்றும் மாதப்பிறப்பு நாட்களில் விளக்குபூஜை செய்வது மிகுந்த நற்பலன் தரும்.
சித்திரை - தானிய வளம் .
வைகாசி - செல்வச்செழிப்பு.
ஆனி - திருமண பாக்கியம்.
ஆடி - ஆயுள்பலம்.
ஆவணி - கல்வித்தடை நீக்கம், அறிவார்ந்த செயல்
புரட்டாசி - கால்நடைகள் அபிவிருத்தி
ஐப்பசி - நோய் நீங்குதல்
கார்த்திகை - புத்திரபாக்கியம், சகல வளம்.
மார்கழி - ஆரோக்கியம் அதிகரிப்பு.
தை - எடுத்த செயல்களில் வெற்றி.
மாசி - துன்பம் நீங்குதல்.
பங்குனி - ஆன்மிக நாட்டம், தர்மசிந்தனை வளர்தல்.
பழமையான விளக்கு திருவிழா: திருவிளக்கு வழிபாடு இன்று நேற்று தோன்றியதல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மக்கள் இறைவனை ஜோதியாக வணங்கிப் போற்றியுள்ளனர். சங்ககால இலக்கியங்கள் இந்த வழிபாட்டை கார்த்திகை விளக்கீடு என்று குறிப்பிடுகின்றன. பெண்கள் விளக்கு வழிபாடு செய்த நிகழ்வு அகநானூறு, நற்றிணை போன்ற எட்டுத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கிய ஆய்வாளர்கள் சிலர், கார்த்திகை மாதத்தையே முதல் மாதமாகக் கொண்டு தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டதாக கருதுகின்றனர். கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தன்று வீடு முழுக்க விளக்கேற்றுவதைப் பற்றி சம்பந்தர் பாடியிருக்கிறார். மயிலாப்பூரில் தனக்கு நிச்சயம் செய்த பூம்பாவை என்ற பெண் திடீரென மரணமடையவே, அவர் விளக்கீடு காணாதே போதியே பூம்பாவாய் என்று பாடுவதில் இருந்து இந்த விழாவின் மேன்மையை அறியலாம்.
பொட்டு வைக்கும் முறை: வீட்டில் திருவிளக்கு ஏற்றும் முன் சந்தனம் குங்குமம் இடவேண்டும் என்பது நியதி. விளக்கின் எட்டு பாகத்தில் பொட்டு இட வேண்டும். அவை உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை. எட்டு இடங்களிலும் பொட்டிடும்போது, ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானித்து இடவேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியாவும் ஒரு காரணமும் சொல்வர். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன.
மனநிம்மதி தரும் விளக்கு: வீடுகளில் நாம் குத்துவிளக்கு, அகல்விளக்கு, காமாட்சி விளக்கு, கிலியஞ்சட்டி (மண்ணால் ஆனது) என்றெல்லாம் ஏற்றுகிறோம். இவை எல்லாவற்றிலும் விட உயர்ந்தது சரவிளக்கு. வெள்ளி நெய் தீபம் ஏற்றினால் வருமானம் அதிகரிக்கும், கடன் தீரும். ஐந்துமுக குத்து விளக்கேற்றினால் திருமணத்தடை நீங்கும், குடும்ப ஒற்றுமை நிலைக்கும். செடி விளக்கு ஏற்றினால் குடும்பம் முழுமைக்கும் நோய் நீங்கும். உங்கள் குழந்தைகளும், பேரன் பேத்திகளும் சிறப்பாகப் படித்து நல்லநிலைக்கு முன்னேறுவர். ஆக, இவையெல்லாம் குறிப்பிட்ட சில பலனையே தருகின்றன. என்ன தான் பொருளும், பணமும் இருந்தாலும் மனநிம்மதி தான் முக்கியம். நிம்மதியின்மைக்கு காரணம் ஜென்ம ஜென்மமாக நாம் செய்த பாவங்களின் தாக்கமே. ஜென்மாந்திர பாவங்கள் அடியோடு அழிய தொங்கும் சரவிளக்கு ஏற்ற வேண்டும். கோயில்களிலுள்ள சரவிளக்குகளுக்கு எண்ணெய், நெய் வாங்கிக் கொடுக்க வேண்டும்.
எந்த எண்ணெய்க்கு என்ன பலன்?: தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.
நெய்- செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்
நல்லெண்ணெய்- ஆரோக்கியம் அதிகரிக்கும்
தேங்காய் எண்ணெய்- வசீகரம் கூடும்
இலுப்பை எண்ணெய்- சகல காரிய வெற்றி
விளக்கெண்ணெய்- புகழ் தரும்
ஐந்து கூட்டு எண்ணெய்- அம்மன் அருள்