பதிவு செய்த நாள்
14
நவ
2013
11:11
வாழப்பாடி: வாழப்பாடி பகுதியில் பிரசித்தி பெற்ற காவல் தெய்வத்துக்கு, பாக்கு தொழிலாளர்கள், ஆட்டுக்கிடா பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தும், "சிங்கிபுரம் தோப்பு ஸ்வாமி திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. ஒரே நாளில், இரண்டாயிரம் ஆட்டுக்கிடா பலியிட்டு, பாக்கு தொழிலாளர்களும், வியாபாரிகளும் சிறப்பு வழிபாடு நடத்தினர். மாநில அளவில், பாக்கு உற்பத்தியில் வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சேலம் மாவட்டம் மட்டுமின்றி, நாமக்கல் மாவட்டம் மங்களபுரம், மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, சேந்தமங்கலம், தர்மபுரி மாவட்டம் அரூர், கோட்டப்பட்டி, சேலூர், சிட்லிங் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பாக்கு காய்களையும், வாழப்பாடி அடுத்த, சிங்கிபுரம் கிராமத்தை சேர்ந்த பாக்கு வியாபாரிகளே, ஆண்டு குத்தகை முறையில் அறுவடை செய்கின்றனர். வாழப்பாடி வடக்குக்காடு, சிங்கிபுரம் குடித்தெரு, நாடார் தெரு, பழனியாபுரம், பொன்னாரம்பட்டி, பதுவுகொட்டாய் ஆகிய கிராமங்களில் மரம் ஏறும் தொழிலாளர்கள், தோலுரித்து, வேகவைத்து பதப்படுத்தும் தொழிலாளர்கள் உள்ளிட்ட, 20,000 பேர் பாக்கு தொழிலை நம்பியுள்ளனர். ஆண்டு தோறும் பாக்கு அறுவடை சீஸன் துவங்கும் போது, மரம் ஏறும் தொழிலாளர்கள், சிங்கிபுரம் நாடார் தெரு ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை வீரன் கோவிலில் குடும்பத்தோடு சென்று, விபத்து மற்றும் உயிர் சேதமின்றி பாதுகாக்க வேண்டுதல் வைக்கின்றனர். பாக்கு அறுவடை சீஸன் முடிவுக்கு வரும் ஐப்பசி மாதத்தில், காவல் தெய்வத்துக்கு, ஆட்டு கிடா பலிகொடுத்து சிறப்பு பூஜை வழிபாடு நடத்துகின்றனர். 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வரும் விழா, "சிங்கிபுரம் தோப்பு ஸ்வாமி திருவிழா என அழைக்கப்படுகிறது. வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில், அந்த திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. அதிகாலையில் இருந்தே கோவில் வளாகத்தில் குவிந்த பக்தர்கள், 2,000க்கும் அதிகமான ஆட்டு கிடாக்களை பலியிட்டு, காவல் தெய்வத்துக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஸ்வாமிக்கு பலி கொடுத்த ஆட்டுக்கிடா கறியை சமைத்து, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அசைவ விருந்து வைத்தனர்.